'கோழிப்பண்ணை செல்லதுரை' படத்திற்கு மற்றுமொரு அங்கீகாரம் !

தேசிய விருது பெற்ற சீனு ராமசாமி 'கோழிப்பண்ணை செல்லதுரை' படத்தை இயக்கியுள்ளார்.

Update: 2024-10-15 07:15 GMT

ஸ்பெயின்,

தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை' 'மாமனிதன்' ஆகிய வெற்றி படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் தற்போது 'கோழிப்பண்ணை செல்லதுரை' என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் யோகி பாபு, ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.

கிராமத்துக் கதைக்களத்தில் அண்ணன் - தங்கை உறவைப் பேசும் படமாக உருவாகியுள்ள, இப்படம் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. "உறவுகளின் மேன்மையை, அன்பைச் சொல்லும் திரைப்படம்" என அனைவரும் பாராட்டி வருகிறார்கள். ஆக்லெண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்கிற பெயரையும் இது பெற்றுள்ளது.

இதற்கிடையில், ஜப்பானில் நடைபெற்ற 10 வது டாப் இண்டி திரைப்பட விருது எனும் பன்னாட்டு திரைப்பட விழாவில் 'கோழிப்பண்ணை செல்லதுரை' படத்தில் நடித்த சத்யா தேவிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. மேலும் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் எனும் விருதுகளுக்கு நாமினேஷன் என்ற தகுதியை பெற்றது.

இந்தநிலையில் மற்றுமொரு அங்கீகாரமாக, ஸ்பெயின் நாட்டில் 36 வருடமாக நடந்து வரும் பாரம்பரிய ஜிரோனா திரைப்பட விழாவில் சிறந்த படமாக இயக்குனர் சீனு ராமசாமியின் 'கோழிப்பண்ணை செல்லதுரை' தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதன்முதலாக ஒரு தமிழ் திரைப்படம் இவ்விழாவில் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்