'லியோ' படத்தின் சாதனையை முறியடித்த 'அமரன்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.;
சென்னை,
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தீபாவளி பண்டிகையில் வெளியான படம் 'அமரன்'. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. தொடர்ந்து, பல்வேறு பிரபலங்களின் பாராட்டுகளை இப்படம் பெற்று வருகிறது. படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. இந்த நிலையில், உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
இந்த நிலையில் அமரன் படம் வெளியாக இரண்டு வாரங்களை கடந்துள்ள நிலையில் 'புக் மை ஷோ' செயலியில் விஜய்யின் 'லியோ' படத்தை முந்தியுள்ளது. அதாவது 'லியோ' படம் இரண்டாவது வாரத்தில் ஐந்து லட்சத்திற்கும் மேல் 'புக் மை ஷோ' செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போது 'அமரன்' படம் இரண்டாவது வாரத்தில் 8 லட்சத்திற்கும் மேல் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது வாரத்தில் ஜெயிலர் படம் 10 லட்சத்திற்கும் மேல் டிக்கெட் முன்பதிவு செய்யபட்டு முதல் இடத்தில் உள்ளது. இதன்மூலம் தமிழ் சினிமாவில் முதல் இடங்களில் ஜெயிலர், அமரன், லியோ படங்கள் உள்ளன.