இணையத்தை அதிரவைக்கும் திரைப்பிரபலங்களின் அந்த ஒரு வார்த்தை...

பாலஸ்தீனர்களின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-05-29 05:21 GMT

சென்னை,

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 7 மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் காசாவில் மட்டும் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். ஹமாசை அடியோடு ஒழிக்கும் வரை போர் நிறுத்தம் என்பது இல்லை என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றன.

குறிப்பாக சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி காசாவின் ரபா நகர் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர் காரணமாக இடம் பெயர்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் ரபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளதால் அங்கு தாக்குதல்களை நடத்த வேண்டாம் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா.வும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் இஸ்ரேல், ரபா நகர் மீதான தாக்குதலை நாளுக்குநாள் தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரபா நகரில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் அதே பகுதியில் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இதில் 16 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து நேற்றும் காசாவில் இஸ்ரேல் வான்தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதல்களில் இதுவரை 37 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், காசாவின் ரபா பகுதியில் உள்ள பாலஸ்தீனர்களின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்தனர். இது குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தியாவில் உள்ள பல பிரபலங்கள் கண்டித்துள்ளனர்.

இதுதொடர்பாக பலரும் தங்களின் வலைதள பக்கங்களில் 'ஆல் ஐஸ் ஆன் ரபா' என்பதை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகைகள் திரிஷா, சமந்தா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஆல் ஐஸ் ஆன் ரபா' என பதிவிட்டுள்ளனர். இதன்மூலம் அனைவரும் ரபா மீதான தாக்குதலை கவனிக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த பதிவுகள் செய்யப்பட்டு வருகிறது.இது குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் ‛ஆல் ஐஸ் ஆன் ரபா' என்ற போஸ்டரை இன்ஸ்டாவில் கடந்த 24 மணிநேரத்தில் பிரபலங்கள் உள்பட 2.9 கோடி பேர் பகிர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்