அக்சய் குமாரின் பிறந்தநாள் இன்று: தேசிய விருது பெற்ற நடிகரின் சிறந்த திரைப்படங்கள், பாடல்கள்
அக்சய் குமார் இன்று தனது 57 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.;
மும்பை,
பாலிவுட்டின் முன்னணி நடிகராக உள்ள அக்சய் குமார் ஆக்சன் காட்சிகளுக்காக புகழ் பெற்றவர். இவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 'ருஸ்டம்' படத்திற்காக மதிப்புமிக்க தேசிய திரைப்பட விருதையும், 'அஜ்னபி' மற்றும் 'கரம் மசாலா' படத்திற்காக இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் அக்சய் வென்றுள்ளார். 'ஹேரா பேரி', 'ஹவுஸ்புல்', 'பேட் மேன்' மற்றும் 'நமஸ்தே லண்டன்' போன்ற பல படங்களில் நடித்ததற்காக அவர் கொண்டாடப்பட்டார்.
இவர் இன்று தனது 57 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அக்சய் குமார், டெல்லியில் பிறந்தார். விளையாட்டு மற்றும் தற்காப்புக் கலைகளில் ஆர்வம் கொண்ட அக்சய், பாங்காக்கில் குத்துச்சண்டை பயிற்சியைப் பெற்றார். பின்னர் தற்காப்புக் கலை பயிற்றுவிப்பாளராக ஆனார்.
அக்சய் தன் முதல் படத்தில் கராத்தே பயிற்றுவிப்பாளராக நடித்தார். அதனைத்தொடர்ந்து, 'தீதர்' படத்தில் ஒப்பந்தம் ஆனார். பின்னர் இவர் நடித்த 'கிலாடி' திரைப்படம் இவரை அதிரடி ஹீரோவாக மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து, 1994 இல், அக்சய் மைன் கிலாடி து அனாரி மற்றும் மொஹ்ரா ஆகிய படங்களில் நடித்தார், இவை இரண்டும் வசூல் சாதனை படைத்தன.
பின்னர் இவரின் ஹேரா பெரி அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்படம் இவர் ஒரு நகைச்சுவை நடிகர் என்பதையும் காட்டியது. இதற்குப் பிறகு, கரம் மசாலா, ஆவாரா பகல் தீவானா, ஹவுஸ்புல் போன்ற பல நகைச்சுவைத் திரைப்படங்களில் நடித்துள்ளார். வெல்கம், ஹாலிடே, ஸ்பெஷல் 26, பூல் புலையா, பேபி, ருஸ்டம் மற்றும் ஹவுஸ்புல் போன்ற படங்கள் இவருக்கு குறிப்பிடத்தக்க பெயரை வாங்கி கொடுத்தன. மேலும், சுரா கே தில் மேரா, திப் திப் பர்சா பானி, தெறி மிட்டி, தேரே சங் யாரா, புர்ஜ் கலிபா மற்றும் ஹூக்கா பார் உள்ளிட்ட இவரது பாடல்கள் மிகவும் பிரபலமாகின.