நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள்: வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்
நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 74-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.;
சென்னை,
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 74-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள் அவரது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இவருக்கு தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாமல். ஒட்டுமொத்த இந்திய திரையுலகமுமே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றது.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்துக்கு திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
வயிற்றில் தொப்பை சேராத உடலோடும். தலையில் கர்வம் சேராத மனதோடும் அரைநூற்றாண்டாய் ஒரு நட்சத்திரம் உச்சத்தில் இருப்பது அத்துணை எளிதல்ல. ஆனால் இன்னும் தேயாத கால்களோடு, ஓயாத ஓட்டம் சூப்பர் நண்பரே! ஓய்வு குறித்த சிந்தனை உங்களுக்குண்டா? தெரியாது. ஆயினும் ஒரு யோசனை: ஓய்வுக்குமுன் இன்னோர் உச்சம் தொடுங்கள் அல்லது இன்னோர் உச்சம் தொட்டபின் ஓய்வு பெறுங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்;
எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் - ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்க்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள், திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன் என கூறியுள்ளார்.
தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்
தன் ஆற்றல்மிகு நடிப்புத்திறமையால் உலகெங்கும் வாழும் திரை ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ள திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினி சாரின் கலையுலகப் பயணம் இன்று போல் என்றும் நம் எல்லோரையும் மகிழ்விக்கட்டும். நல்ல உடல் நலத்துடன் அவர் பல்லாண்டு வாழ வாழ்த்தி மகிழ்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்
அன்பு நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிகள் பெறுக; நலம் சூழ்க; மகிழ்ச்சி நிறைக; நீடு வாழ்க எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் "ஒரே ஒரு சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். என் தலைவா ரஜினிகாந்த் சார் என இதய இமோஜியை பதிவிட்டுள்ளார்.
தமிழக பஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்
எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது கடும் உழைப்பாலும், மேன்மையான பண்புகளாலும், இந்தியத் திரையுலகின் அடையாளங்களில் ஒருவராக உயர்ந்திருக்கும், அன்புக்கும் மரியாதைக்கும் உரிய, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்க்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக,மூன்று தலைமுறைகளை, தனது வசீகரத்தால் கட்டிப் போட்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேலும் பல்லாண்டுகள் நலமுடன் ஆரோக்கியத்துடன் வாழ, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ள பதிவில்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா என இதய இமோஜியை பதிவிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில்;
எவரையும் கவர்ந்திழுக்கும் ஈர்ப்புமிக்க நடிப்பாற்றலாலும், தனித்துவமிக்க நடை, உடை, பாவனைகளாலும், நேர்த்தியான உடல்மொழியாலும் மக்கள் மனதை வென்று, இந்தியத் திரையுலகை தமிழ்நாட்டை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த திரை ஆளுமை, திரைத்துறையில் இருந்த நிற ஆதிக்கத்தை உடைத்துத் தகர்த்து, தனது ஆகச்சிறந்த நடிப்பால் அனைவரையும் தன்வசப்படுத்தி, திரை வானில் மிளிரும் உச்ச நட்சத்திரம்.
காலங்கடந்தும் ரசிக்கும்படியான நடிப்பினைக் கொடுத்து, மூன்று தலைமுறையினரை மகிழ்வித்த ஆகப்பெரும் திரைக்கலைஞர், பணம், புகழ், பெயர், செல்வாக்கு என எல்லாவற்றிலும் உச்சம் தொட்டாலும், அவற்றைத் துளியும் தலைக்கேற்றாது பணிவோடும், திறந்த மனதோடும் எல்லோரையும் அணுகும் தன் நிலை எந்நாளும் மாறாத பெருமகன்.பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார் .
த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள பதிவில்;
பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.