கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 2 கோடி நிதியுதவி; புஷ்பா 2 படக்குழு

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 2 கோடி நிதியுதவி அளிப்பதாக புஷ்பா 2 படக்குழு அறிவித்துள்ளது.

Update: 2024-12-25 11:54 GMT

ஐதராபாத்,

அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' படம் கடந்த 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. நடிகர் அல்லு அர்ஜுன் படத்தை பார்க்க சென்றார். அவருடன் நடிகை ராஷ்மிகா மந்தனா உள்பட பலரும் சந்தியா தியேட்டருக்கு வந்தனர்.

இதனால், தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, குடும்பத்துடன் புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண், அவரது மகன் ஸ்ரீதேஜ் (வயது 9) ஆகிய இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கினர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறுவன் ஸ்ரீதேஜுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது தாயாரான ரேவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் கடந்த 13ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அல்லு அர்ஜுனுக்கு ஐதராபாத் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து அவர் மறுநாள் (14ம் தேதி) விடுதலையானார்.

அதேவேளை, கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் ஸ்ரீதேஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவனின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரேவதியின் குடும்பத்திற்கு ரூ. 2 கோடி நிதியுதவி அளிப்பதாக புஷ்பா 2 படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, புஷ்பா 2 பட நடிகர் 1 கோடி ரூபாயும், இப்படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் 50 லட்ச ரூபாயும், படத்தின் டைரக்டர் 50 லட்ச ரூபாயும் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்