தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை.. நாளைக்கு என்ன ஆகுமோ..? 'திக் திக்' மனநிலையில் மக்கள்

சில நாட்களாக உள்ள நிலவரங்களை பார்க்கையில், வரும் நாட்களிலும் ஏற்ற இறக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2024-08-19 09:48 GMT

இந்தியாவில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து, சவரன் 55 ஆயிரம் ரூபாயை கடந்த நிலையில், மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பு ஆறுதல் அளிப்பதாக அமைந்தது. தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக மத்திய அரசு குறைத்ததால் விலையும் சரசரவென குறைந்தது.

கடந்த மாதம் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.5000 வரை குறைந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள், இனி கொஞ்ச நாளைக்கு தங்கம் விலை உயர வாய்ப்பு இல்லை என்று நினைத்திருந்தனர். ஆனால், அதை பொய்யாக்கும் வகையில் மீண்டும் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

அவ்வகையில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.53,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.6,670-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ரூ.91-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது. வெள்ளியின் விலையிலும் மாற்றம் இல்லை. இது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இருந்தாலும் கடந்த சில நாட்களாக உள்ள நிலவரங்களை பார்க்கையில், வரும் நாட்களிலும் ஏற்ற இறக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயரவே அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஆடி மாதம் முடிந்து திருமண சீசன் தொடங்கும் என்பதால் தங்கத்தின் தேவை அதிகரிக்கும். அதேசமயம், அமெரிக்காவின் மத்திய வங்கி, செப்டம்பர் மாதத்துக்கான வட்டி விகிதத்தை உயர்த்தினால் அதன் தாக்கம் தங்கம் மீது எதிரொலிக்கும்.

எனவே, நாளைக்கு என்ன ஆகுமோ? என்ற மனநிலையில்தான் மக்கள் உள்ளனர். ஆதலால், தங்கம் வாங்க நினைப்பவர்கள், இப்போது சற்று குறைந்திருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி தங்கம் வாங்கலாம். 

Tags:    

மேலும் செய்திகள்