யுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு
கடந்த செப்டம்பர் 15 முதல் 24-ம் தேதி வரை நடைபெற்ற சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் தேர்வை நடத்தி வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இத்தேர்வு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது.
இதனிடையே 1,105 காலி பணியிடங்களுக்கான 2023 -ம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் ஜூன் 12 -ம் தேதி அதன் முடிவுகள் வெளியாகின.
இதைத்தொடர்ந்து முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வு கடந்த செப். 15, 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இது 9 எழுத்துத் தேர்வுகளை உள்ளடக்கியது.
இந்த நிலையில் செப்டம்பர் 15 முதல் 24ம் தேதி வரை நடைபெற்ற யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை http://upsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். அனைத்து தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழும் 15 நாட்களில் இணையளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.