அரியானா சட்டசபை தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

அரியானா சட்டசபை தேர்தல் இன்று ஒரேகட்டமாக நடைபெற்றது.;

Update: 2024-10-05 01:30 GMT

சண்டிகார்,

அரியானாவில் முதல்-மந்திரி நயாப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், 90 தொகுதிகளை கொண்ட அரியானா சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த தேர்தலில், 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில், முதல்-மந்திரி நயாப் சிங் சைனி, எதிர்க்கட்சி தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா, லோக்தளம் தலைவர் அபய்சிங் சவுதாலா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள் ஆவர்.

அரியானா முழுவதும் 20 ஆயிரத்து 629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2 கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 90 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அரியானா சட்டசபை தேர்தலில், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. லோக்தளம்-பகுஜன் சமாஜ் கட்சி, ஜனநாயக ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில், 2 முறை ஆட்சியை பிடித்துள்ள பா.ஜ.க. 3-வது முறையாக வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளது. 

Live Updates
2024-10-05 12:49 GMT

அரியானா சட்டசபை தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

90 தொகுதிகளை கொண்ட அரியானா சட்டசபைக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில், அரியானா சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து வாக்கு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

2024-10-05 12:45 GMT

5 மணி நிலவரம்

அரியானா சட்டசபை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது////////. 

2024-10-05 10:41 GMT

மதியம் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்

அரியானா சட்டசபை தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 49.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

2024-10-05 10:33 GMT

ஹரியானா ஆம் ஆத்மி தலைவர் சுஷில் குப்தா ஜாஜரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். அதன்பின்னர் பேசிய அவர் கூறுகையில், "அரியானாவில் இன்று ஜனநாயகத் திருவிழா கொண்டாடப்படுகிறது. மக்கள் மாற்றத்திற்காக வாக்களிக்கிறார்கள், மாநிலத்தில் சிறந்த சுகாதாரம் மற்றும் கல்வி அமைப்புக்காக காத்திருக்கிறார்கள்" என்றார்.

2024-10-05 10:26 GMT

அரியானா முதல்-மந்திரியும், லட்வா தொகுதியின் பாஜக வேட்பாளருமான நயாப் சிங் சைனி, லட்வாவில் உள்ள குருத்வாராவில் பிரார்த்தனை செய்தார். இங்குள்ள வாக்குச்சாவடியில் உள்ள பாஜக உதவி மையத்தையும் அவர் பார்வையிட்டார்

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயாப் சிங் சைனி, "நாங்கள் நிறைய அன்பைப் பெறுகிறோம், மாநிலம் முழுவதும் தாமரை மலரும், லட்வாவிலும் தாமரை மலரும். காங்கிரசின் பாகுபாடு அரசியலை நாங்கள் முடித்துவிட்டோம். ஹூடா ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை மட்டுமே பார்க்கிறார், ஆனால் எங்கள் அரசாங்கத்தில், நாங்கள் சப்கா சாத், சப்கா விகாஸ், அனைவரையும் அழைத்துச் சென்றுள்ளோம். 7 தலைமுறை காங்கிரசால் கூட இவ்வளவு வேலை செய்ய முடியாது என்று தெரிவித்தார்.


2024-10-05 08:30 GMT

மதியம் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்

அரியானா சட்டசபை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 36.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

2024-10-05 07:37 GMT

அரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினரும், மல்புத்த வீரருமான பஜ்ரங் புனியா, அவரது மனைவி சங்கீதா போகத் ஆகியோர் ஜாஜர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பஜ்ரங் புனியா கூறுகையில், "முடிந்தவரை அரியானா மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இன்று அரியானாவில் வேலைவாய்ப்பு பற்றாக்குறை உள்ளது. 2005-2014 வரை ஆட்சியில் இருந்த அரசால் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் வளர்ச்சியடைந்தனர். கடந்த 10 ஆண்டுகளில், விளையாட்டு வீரர்கள், விவசாயிகள், ராணுவ வீரர்கள் என யாரெல்லாம் குரல் கொடுத்தாலும், அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது" என்றார்.


2024-10-05 07:16 GMT

அரியானா சட்டசபை தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக, காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான பூபிந்தர் சிங் ஹூடா செய்தியாளர்களிடம் கூறுகையில், "அரியானாவில் காங்கிரஸ் அதிக பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும். யார் முதல்-மந்திரி என்பதை உயர்மட்டக் குழு முடிவு செய்யும். வேலையில்லா திண்டாட்டம், சட்டம் மற்றும் ஒழுங்கு, மாநில வளர்ச்சி ஆகியவற்றில் எங்கள் அரசு செயல்படும்" என்றார்.


2024-10-05 06:25 GMT

காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்:-

அரியானா சட்டசபை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 22.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

2024-10-05 06:01 GMT

அரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கர்ஹி சாம்ப்லா-கிலோய் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்-மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா, தனது மகன் தீபேந்தர் ஹூடா மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தனது சொந்த கிராமமான சாங்கி, ரோஹ்தக்கில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்