கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம்; பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழகத்தின் நலன்களை பாதுகாப்பதற்கு தி.மு.க. எதுவும் செய்யவில்லை என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டு உள்ளார்.

Update: 2024-04-01 03:26 GMT

புதுடெல்லி,

இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியின்போது, ஒப்பந்தம் போடப்பட்டு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இந்நிலையில், கச்சத்தீவு பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவலை குறிப்பிட்டு, பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் நேற்று சில விவரங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில், கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி எப்படி தாரை வார்த்து கொடுத்தது என்பது பற்றிய புதிய உண்மைகள் வெளிப்பட்டு உள்ளன. இந்த விசயம் ஒவ்வோர் இந்தியனையும் ஆத்திரப்படுத்தி உள்ளது. காங்கிரசை நாம் ஒருபோதும் நம்ப முடியாது என்று மக்களின் மனங்களில் பதியும் வகையில் மற்றொரு விசயம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்தும் வகையில், 75 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பணியாற்றும் விதம் தொடர்ந்து வருகிறது என அவர் பதிவிட்டார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததில் தி.மு.க.வின் பங்கு பற்றி இன்று வெளியிடுவேன் என அண்ணாமலை அறிவித்து உள்ளார்.

இந்நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட செய்தியில், தமிழகத்தின் நலன்களை பாதுகாப்பதற்கு தி.மு.க. எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவு பற்றிய புதிய விவரங்கள் வெளிப்பட்டு வருவதனால், முற்றிலும் இரட்டை நிலைப்பாட்டை கொண்ட தி.மு.க.வின் வேடம் கலைந்துள்ளது.

காங்கிரஸ் மற்றும் தி.மு.க. ஆகியவை குடும்ப கட்சிகள். அவர்களுடைய சொந்த மகன்கள் மற்றும் மகள்களின் வளர்ச்சியை பற்றியே அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். வேறு யாருக்காகவும் அவர்கள் கவலைப்படுவதில்லை. கச்சத்தீவில் அவர்கள் காட்டிய அலட்சியம் ஆனது, நம்முடைய ஏழை மீனவர்கள், குறிப்பிடும்படியாக மீனவ பெண்களின் நலன்களுக்கு தீங்கு ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இந்த விவகாரம் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்