ஆவணி மாத ராசி பலன்கள் 17-08-2022 முதல் 17-09-2022 வரை
சமூக சேவையில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு உதவ நினைக்கும் ரிஷப ராசி நேயர்களே!
ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், எதை எந்த நேரத்தில் செய்ய நினைத்தீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
சிம்ம - சூரியன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 4-ம் இடமான சுக ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சூரியன். அவர் அங்கேயே மாதம் முழுவதும் சஞ்சரிப்பதால் உடல்நலம் சீராகி உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். கடன்சுமை குறையும். கல்வி, கலைகளில் தேர்ச்சி பெற எடுத்த முயற்சி கைகூடும். நண்பர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
கன்னி - புதன் சஞ்சாரம்
ஆவணி 8-ந் தேதி, கன்னி ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், கன்னி ராசியில் உச்சம் பெறுவதால் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். பூமி விற்பனையால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிப்பது இரண்டாம் இடமாகும். எனவே கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
வக்ர புதன் சஞ்சாரம்
ஆவணி 12-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் வக்ரம் பெறுவதால், எதிர்பாராத வகையில் பிரச்சினைகள் உருவாகும். ஆகையால் குடும்பப் பெரியவர்களை ஆலோசித்து முடிவெடுங்கள். கொடுக்கல்- வாங்கல்களில் சிலருக்கு ஏமாற்றம் வந்து சேரும். தன்னிச்சையாகச் செயல்பட இயலாது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள்.
சிம்ம - சுக்ரன் சஞ்சாரம்
ஆவணி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும் போது, நல்ல காரியங்கள் பல இல்லத்தில் நடைபெறும். உத்தியோகத்தில் உயர் பதவிகள் வந்துசேரும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். பயணங்கள் பலன் தரும். வீடு, இடம் வாங்கும் யோகம் வாய்க்கும்.
குரு வக்ரமும், சனி வக்ரமும்
மாதம் முழுவதும் குருவும், சனியும் வக்ர இயக்கத்தில் உள்ளனர். உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு, உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகை கிரகம் ஆவார். எனவே குருவின் வக்ர காலம் நற்பலன்களை வழங்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் போட்டிகள் அகலும். உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி வக்ரம் பெறுவதால், சுயதொழில் செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்.
இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் விநாயகப்பெருமானை வழிபட்டால் நல்லது நடக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஆகஸ்டு: 22, 23, 27, 28, செப்டம்பர்: 8, 9, 12, 13மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். புத்திர ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும். சுபகாரியங்கள் நடைபெற வழிபிறக்கும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறுவ தோடு இனிமை தரும் விதத்தில் இடமாற்றங்கள் ஏற்படும்.