மாசி மாத ராசி பலன்கள் 13-02-2023 முதல் 14-03-2023 வரை
விடாமுயற்சியால் வெற்றியை எட்டிப்பிடிக்கும் ரிஷப ராசி நேயர்களே!
மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியிலேயே விரயாதிபதி செவ்வாய் வீற்றிருக்கிறார். எனவே வரவைக் காட்டிலும் செலவு கூடும். இருப்பினும் லாபாதிபதி குரு, லாப ஸ்தானத்தில் இருப்பதால் விரயம் வருவதற்கு முன்னதாகவே வரவு வந்துசேரும். சேமிக்க இயலாமல் போனாலும் செயல்பாடுகளில் வெற்றி உண்டு.
மாதத் தொடக்கத்தில் 6-ல் கேதுவும், 12-ல் ராகுவும் இருப்பதால் பயணங்கள் அதி கரிக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராகச் சிலர் செயல்பட்டு உங்கள் முன்னேற்றத்தை தடுக்க நினைக் கலாம். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு3, 5, 7 ஆகிய இடங்களில் பதிவதால் சகோதர ஸ்தானம், புத்திர ஸ்தானம், களத்திர ஸ்தானம் பலப்படுகிறது. எனவே உடன்பிறப்புகளின் உதவியோடு ஒரு நல்ல காரியம் இல்லத்தில் நடக்கலாம். கல்யாண முயற்சிகள் கைகூடும்.
உச்ச சுக்ரன் சஞ்சாரம்
மாசி 4-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். அதோடு உங்கள் ராசிநாதனாகவும் விளங்கும் சுக்ரன், லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் இது ஒரு பொற்காலமாக அமையும். எதை எந்த நேரத்தில் செய்ய நினைத்தீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் பல நடைபெறும். வெளிநாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.
கும்ப - புதன் சஞ்சாரம்
மாசி 9-ந் தேதி, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது, தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அரசு வேலைக்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தால், அது பலன் தரும். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். பிள்ளைகளின் மேற்படிப்பு மற்றும் வேலை சம்பந்தமான வெளிநாடு முயற்சி கைகூடும்.
மீன - புதன் சஞ்சாரம்
மாசி 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். தனாதிபதி நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. வருமானப் பற்றாக்குறை ஏற்படும். 'வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படுகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. கொள்கைப் பிடிப்போடு செயல்பட முடியாது. புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டினாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்வதில் சிக்கல்கள் உருவாகும்.
மேஷ - சுக்ரன் சஞ்சாரம்
உங்கள் ராசிநாதன் சுக்ரன், மாசி 29-ந் தேதி விரய ஸ்தானத்திற்குச் செல்கிறார். இக்காலத்தில் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். குறிப்பாக இடம், பூமி விற்பனை நடைபெறும். இனிய உறவுகள் பகையாகலாம். கடுமையாக முயற்சித்தாலும், காரியம் கடைசி நேரத்தில்தான் கைகூடும். ஆரோக்கியத் தொல்லை உண்டு. ஆதாயம் தராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்றவர்களுக்கு பிரச்சினை ஏற்படலாம்.
மிதுன - செவ்வாய் சஞ்சாரம்
மார்ச் 30-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இக்காலத்தில் மிகமிக கவனம் தேவை. மிதுனத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்ப்பதால் வாக்குவாதம் உண்டாகும். தேவையற்ற வழியில் வருமானம் செலவாகும். குடும்பப் பிரச்சினை அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கல்களில் ஏமாற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் தேக்கநிலை வரலாம். தெளிந்த மனத்தோடு செயல்பட இயலாது. இந்த காலகட்டத்தில் யோக பலம் பெற்ற நாளில் அங்காரக வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
பிப்ரவரி: 19, 20, 23, 24, மார்ச்: 2, 3, 6, 7.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெறுவதால், பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். சுபகாரியங்களுக்காக அதிகம் செலவிடுவீர்கள். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்வது நல்லது. ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு உத்தியோக உயர்வும், ஊதிய உயர்வும் வந்து மகிழ்விக்கும்.