சித்திரை மாத ராசி பலன்கள் 14-04-2023 முதல் 14-05-2023 வரை
கொள்கைப் பிடிப்போடு செயல்படும் ரிஷப ராசி நேயர்களே!
சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே பலம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். விரய ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு இணைந்திருக்கின்றனர். லாப ஸ்தானத்தில் குரு பலம்பெற்று இருக்கின்றார். எனவே இந்த மாதம் எதிர்பாராத விதத்தில் உதவிகள் கிடைத்து இதயம் மகிழப்போகிறீர்கள். தனவரவு திருப்தி தரும். புது முயற்சிகளில் ஈடுபடும் வாய்ப்புக் கிட்டும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் விதத்தில் சனி, செவ்வாய் சஞ்சாரமும் இருக்கின்றது. தொழில் ஸ்தானம் பலம் பெற்றாலே தொழில் வளம் சிறப்பாக இருக்குமல்லவா? அந்த அடிப்படையில் 10-ம் இடம் எனப்படும் தொழில் வளர்ச்சியைப் பற்றி குறிப்பிடும் இடத்தில், சனி பகவான் பலம்பெற்றுச் சஞ்சரிக்கின்றார். எதிர்கால நலன்கருதி புதிய திட்டங்களைத் தீட்டி அதில் வெற்றி காணப்போகின்றீர்கள்.
சனியின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், மாதத் தொடக்கத்தில் 10-ம் இடத்தில் பலம் பெற்றிருப்பதால் 'தர்ம கர்மாதிபதி யோகம்' செயல்படப் போகின்றது. இதனால் தொழில் வளர்ச்சிக்கு தொல்லை தந்தவர்கள் விலகுவர். இடையூறு செய்தவர்கள், இருந்த இடம் தெரியாமல் மாறிச்செல்வர். உத்தியோகத்தில் உள்ளவர்கள், விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு சுயதொழில் தொடங்கும் முயற்சியில் தீவிரம் காட்டுவர். கணிசமான தொகை கைகளில் புரளும். உறவினர்கள் உங்களுக்குப் பகையாக மாறினாலும், நண்பர்கள் உங்களுக்கு நல்லது நடக்க வழிவகுப்பர். களைப்பைத் தவிர்த்து உழைப்பில் ஈடுபட்டு, பிழைப்பின் மூலம் பெருந்தொகை சேரும் நேரம் இது. இருந்தாலும், பெற்றோர்களின் உடல்நலத்தில் பிரச்சினை உருவாகலாம், கவனம் தேவை.
மேஷ - குரு
சித்திரை 9-ந் தேதி, உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சியாகின்றார். விரய ஸ்தானத்திற்கு குரு வந்தாலும், உங்கள் ராசிக்கு அவர் அஷ்டம - லாபாதிபதி என்பதால், விரயத்திற்கேற்ற லாபம் வந்துகொண்டே இருக்கும். கட்டுமானப் பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். 'அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்யலாமா?' என்று சிந்திப்பீர்கள். விரய ஸ்தான குருவின் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே ஆரோக்கியம் சீராக இருக்கும். வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். வீடு, இடம் வாங்குவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்ற விஷயங்கள் கைகூடும். உத்தியோகத்தில் எடுத்த புது முயற்சி பலன் தரும். தேங்கிய காரியங்கள் துரிதமாக நடைபெறும்.
மிதுன - சுக்ரன்
சித்திரை 20-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்ரன் 2-ம் இடத்திற்கு செல்வது யோகம்தான். குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். தங்கம், வெள்ளி மற்றும் வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட, குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் சம்பாதிக்கும் வாய்ப்பு உருவாகும்.
இம்மாதம் லட்சுமிதேவி வழிபாடு இனிமை சேர்க்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 14, 15, 18, 19, 25, 26, 30, மே: 1, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்சு.