ஆடி மாத ராசி பலன்கள் 17-07-2023 முதல் 17-08-2023 வரை
மனதில் உள்ள வருத்தங்களை மறைத்துக் கொண்டு பேசும் மகர ராசி நேயர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் இருந்தே சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். ஏழரைச் சனியில் குடும்பச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகின்றது. எனவே இந்த வக்ர இயக்க காலத்தில் குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கும். செலவு நடைகள் கூடுகின்றதே என்று கவலைப்படுவீர்கள். செயல்பாடுகளில் தேக்க நிலை ஏற்படும். ஊக்கமும், உற்சாகமும் குறையலாம். செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிவதால் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரம் இது.
மேஷ - குரு சஞ்சாரம்
நவக்கிரகங்களில் சுபகிரகமாக விளங்கும் குரு பகவான், இப்பொழுது உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். எனவே அர்த்தாஷ்டம குரு ஆரம்பிக்கிறது. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. பயணங்களால் விரயம் உண்டு. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவு உண்டு. குருவின் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்து அலைமோதும். ஒருகடனை அடைக்க மற்றொரு கடன் வாங்குவீர்கள்.
குருவின் பார்வை 10, 12 ஆகிய இடங்களில் பதிவது யோகம்தான். தொழில் வளம் சிறப்பாக அமைய நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். ஒரு சிலருக்குப் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உருவாகும். உத்தியோகத்தை பொறுத்தவரை கேட்ட சலுகைகள் கிடைக்கும். இலாகா மாற்றங்கள் இனிமை தரும். வரவேண்டிய சம்பளப் பாக்கிகள் வசூலாகும். கட்டிடப் பணி பாதியில் நிற்கின்றதே என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது அது முழுமை அடையும். புகழ்மிக்க தலங்களுக்குச் சென்று வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள்.
சிம்ம - புதன்
ஆடி மாதம் 7-ந் தேதி சிம்ம ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிக்கப் போவது யோகம்தான். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். எனவே நிதிப் பற்றாக்குறை அகலும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்பு மாறும். பூர்வீக சொத்துகளை விற்றுவிட்டுப் புதிய சொத்துகளை வாங்கலாமா? என்று சிந்திப்பீர்கள். பெற்றோரின் மணிவிழாக்களை முன்னின்று நடத்தி வைப்பீர்கள்.
பொதுவாழ்வில் உங்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. வியாபாரம், தொழில் செய்பவர்கள் பழைய தொழிலை விட்டுவிட்டுப் புதிய தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடல்நலத் தொல்லை உருவாவதன் காரணமாக அடிக்கடி விடுமுறை எடுக்கும் சூழ்நிலை உருவாகும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ -மாணவிகளுக்கு எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது. குடும்ப விவகாரத்தில் மூன்றாம் நபரின் தலையீட்டைத் தவிர்ப்பது நல்லது. கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெற வழிபிறக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஜூலை: 23, 24, 26, 27, 28, ஆகஸ்டு: 4, 5.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர்நீலம்.