சமூக நீதியும் பகுத்தறிவுமே தமிழ் நாட்டுக் கல்விக் கொள்கையின் அடித்தளம் - சாதனைகள் படைக்கும் 'இல்லம் தேடிக் கல்வி' இயக்கம்!
உண்மையை முன்கூட்டியே உணர்ந்த தி.மு.க ஆட்சி ஓர் அற்புதமான திட்டத்தை முன்னெடுத்தது. அதுதான் இல்லம் தேடிக் கல்வி (ஐடிகே) திட்டம்.
கடந்துபோன இரண்டு ஆண்டுகளும் கொரோனா பெருந்தொற்றுக் காலமாகவே உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்காலகட்டம் பல்வேறு துறைகளிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. முக்கியமாக கல்வித்துறையில், அதிலும் குறிப்பாக பள்ளிக் கல்வியில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம். பல துறைகளில் ஏற்பட்ட பாதிப்புகளை இயல்பு வாழ்க்கை திரும்பியவுடன் சீரமைக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், கல்வித்துறையில் ஏற்பட்ட இழப்பையும் சேதத்தையும் வெளிப்படையாக அறிந்துகொள்ள முடியாதது.
பெருந்தொற்று காலகட்டத்தில் ஏறக்குறைய 18 மாதங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை. நீண்ட நாட்கள் பள்ளிக்குச் செல்லாததால் படித்ததும் மறந்துபோய் 'கற்றல் இழப்பு' ஏற்பட்டுவிட்டது.
பலர் இதை மற்றும் ஒரு செய்தியாக எண்ணி கடந்துபோய்விடலாம். ஆனால், கொரோனா பள்ளிக் கல்வியில் ஏற்படுத்திய பாதிப்பை சரிசெய்யாவிட்டால் நமது எதிர்காலத் தலைமுறை பெரிய சரிவைச் சந்திக்கும். இந்த உண்மையை முன்கூட்டியே உணர்ந்த தி.மு.க ஆட்சி ஓர் அற்புதமான திட்டத்தை முன்னெடுத்தது. அதுதான் இல்லம் தேடிக் கல்வி (ஐடிகே) திட்டம்.
முதல்வரின் முயற்சி
குழந்தைகளின் உண்மையான கற்றல் நிலைக்கும், கொரோனா காலத்துக்குப் பிறகு அவர்கள் கற்றுக்கொள்ளும் பாடங்களுக்கும் இடையே ஏற்பட்டுவிட்ட 'கற்றல் இடைவெளி'யைப் போக்குவதுதான் இதன் முக்கிய நோக்கம்.
கல்வி சிறந்த தமிழ் நாடு என்பது மகாகவி பாரதியின் வாக்கு. இதை மெய்ப்பிக்கும் வண்ணம் கல்வி வளர்ச்சிக்காக தி.மு.க. அரசு ஏராளமான திட்டங்களை மிகுந்த முனைப்போடு செயல்படுத்திவருகிறது. அந்த அடிப்படையில் 'கற்றல் இழப்பு', 'கற்றல் இடைவெளி' ஆகிய இருபெரும் சிக்கல்களைத் தீர்க்க மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திட்டமிட்டார். அவரது எண்ணத்தில் உதித்த அற்புதமான திட்டம்தான் 'இல்லம் தேடிக் கல்வி'!
நம் குழந்தைகளின் கற்றல் இழப்பைச் சரிசெய்ய வாருங்கள் என்ற முதல்வரின் அன்பான அழைப்பை ஏற்று, 6.7 லட்சம் தன்னார்வலர்கள் அணிவகுத்தனர். அவர்களில் 1.81 லட்சம் தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு இன்று 30 லட்சம் மாணவர்களுக்கு அவர்கள் கற்பித்துவருகின்றனர்.
இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திலும் கொரோனா கால கல்வி இழப்பையும், கற்றல் இடைவெளியையும் சீரமைக்க இதுபோன்ற ஒரு திட்டம் செயல்படுத்தப்படவில்லை. கல்விக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கும் தி.மு.க ஆட்சி, இந்தக் காலகட்டத்திலும் நாட்டுக்கே முன்னுதாரணமாக இந்தத் திட்டத்தை சீராகவும் சிறப்பாகவும் செயல்படுத்தி வருகிறது.
தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பு
'ஒரு பெண் கல்வி கற்றால் அந்தக் குடும்பமே கல்வி கற்றதற்குச் சமம்' என்று நாம் சொல்வதுண்டு. இப்போதோ 'ஒரு பெண் கல்வி கற்றால் அந்தச் சமூகமே கல்வி கற்கும்' என இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களால் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட அடித்தளமாக இருப்பவர்கள் தன்னார்வலர்களே. படித்த பெண்கள் தாமாக முன்வந்து தாங்கள் கற்ற கல்வியைக் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக பயன்படுத்துகிறார்கள்.
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்தும் தன்னார்வலர்களின் கல்வி மீதான ஆர்வம் மிகவும் அர்ப்பணிப்பு மிக்கது. தங்களின் சொந்தக் குழந்தைகளுக்குக் கற்பிப்பதைப் போலவே அனைத்துக் குழந்தைகளுக்கும் கற்பிக்கின்றனர். தன்னார்வலர்கள் மற்றும் குழந்தைகள் பலருக்கு தங்களது ஆற்றலையும். சமூகத்துக்கான பங்களிப்பையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் இது அமைந்திருக்கிறது. மாபெரும் மாற்றங்கள் நாடெங்கும் நல்ல முறையில் நடைபெறுவதற்கான விதை இது.
தமிழ் நாட்டில், 'அறிவொளி' இயக்கத்துக்குப் பிறகு தன்னார்வலர்களும் அரசும் கைகோத்து உழைக்கும் உன்னத இயக்கமாக உருப்பெற்றிருக்கிறது 'இல்லம் தேடிக் கல்வி' இயக்கம். அறிவொளித் தொண்டர்கள் பலர் சமூகப் பொறுப்பு மிக்க கல்வியாளர்களாக உருவானதை நாம் அறிவோம். அதுபோல பல எதிர்காலக் கல்வியாளர்கள் 'இல்லம் தேடிக் கல்வி' இயக்கத்தின் வாயிலாகவும் தமிழ் நாட்டுக்குக் கிடைப்பது உறுதி. அந்தப் பொறுப்போடு இந்த இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கு ஓர் உதாரணமாகத் திகழ்கிறது இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் 'தொடுவானம்' மின் இதழ். தன்னார்வலர்களுக்கான இதழ் என்பதைத் தாண்டி, வாசிப்பவர்களை வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு கைப்பிடித்து அழைத்துச் செல்லும் அருமையான உள்ளடக்கத்தை 'தொடுவானம்' தன்னுள் வைத்திருக்கிறது. 'இல்லம் தேடிக் கல்வி'யில் பயிலும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; இந்த இயக்கத்தின் தன்னார்வலர்களுக்கும்கூட இனி தொடுவானமும் தொட்டுவிடும் தூரம்தான்!
தொலைநோக்குப் பார்வை
''டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜீன் ட்ரெஸ் கொரோனாவுக்குப் பிறகு நாடு முழுவதும் இணையக் கற்றலைப் பற்றி ஆய்வு
ஒன்றைச் செய்தார். அதன் முடிவில் வெறும் 8 சதவிகித மாணவர்களுக்கு மட்டுமே இணையக் கல்வி முழுமையாகச் சென்று சேர்ந்திருக்கிறதெனத் தெரியவந்தது. இதுவுமே எவ்வளவு ஆக்கபூர்வமாகச் சென்றடைந்திருக்கிறது என்று தெரியாது. உண்மையில் நம்மிடம் பெரிய மனிதவளம் உள்ளது. 'இல்லம் தேடிக் கல்வி இயக்கம்' போன்ற திட்டங்களால் நாம் எல்லோரையும் சென்றடைய முடியும். கல்வியை வகுப்பறைக்கு வெளியே வீதிகளிலும் நாம் சிந்திக்க வேண்டும்'' என்று மேனாள் துணைவேந்தர் டாக்டர் வசந்தி தேவி கூறியிருப்பதிலிருந்தே தி.மு.க. ஆட்சியின் தொலைநோக்குப் பார்வையை உணர்ந்துகொள்ள முடியும்!
மாபெரும் சிந்தனை மாற்றம்!
''தன்னார்வலர் என்ற மாபெரும் சக்தியை நமக்குக் காட்டிய இயக்கம்; விதிகள், கட்டுப்பாடுகள் இல்லாமல் குழந்தைகள் சுதந்திரமாகக் கற்பதற்கான வாய்ப்பு... இவை இரண்டும் இல்லம் தேடிக் கல்வியை நாம் கொண்டாடக் காரணங்கள். முப்பதாண்டுகளுக்கு முன் தமிழகத்தின் வீதிகளில் 'புத்தகம் கையில் எடுத்துவிடு; அதுவே உன் போர்வாள்' என்ற முழக்கத்தோடு புறப்பட்டு, வகுப்பறையின் இறுக்கமான கல்விச் சிந்தனைகளைப் புரட்டிப் போட்ட அறிவொளியின் சன்னமான சாயலையும் இல்லம் தேடிக் கல்வியில் நாங்கள் பார்க்கிறோம்.
கடந்த ஏப்ரலில் திருச்சியில் ஒரு விழா நடந்தது. அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.என்.நேரு ஆகியோர் கலந்துகொண்டார்கள். ஆயிரம் நூலகங்கள் அன்று தொடங்கப்பட்டன. அந்த விழாவில் தன்னார்வலர்கள் சிலர் பேசினர். அவர்கள் பேசிய பேச்சைக் கேட்டுப் பிரமித்துப் போனேன். பேச்சிலும் குரலிலும் அவ்வளவு தெளிவு! வீதியில் குழந்தைகளோடு அவர்கள் பெறும் அனுபவத்தின் விளைச்சல் அது.
குழந்தைகளோடு மேலும் மேலும் நெருங்குவதுதான் ஆசிரியர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள முதன்மையான வழி. அதையும் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் சாதித்திருக்கிறது. குழந்தைகள் 'அக்கா' என்று அழைத்து அவர்களைச் சுற்றி இருக்கிறார்கள். தன்னார்வலர்களின் அனுபவங்கள் முறையாகத் தொகுக்கப்பட்டு தமிழ்நாட்டின் முன்வைக்கப்பட்டால், கல்விச் சிந்தனைகளில் பெரும் மாற்றம் உண்டாவது நிச்சயம்'' என்கிறார் கல்வியாளரும் பேராசிரியருமான ச.மாடசாமி.
எத்தனை கோடி வார்த்தைகள்!
இன்று தமிழ்நாட்டின் ஒவ்வோர் ஊரின் ஒவ்வொரு இல்லம் தேடிக் கல்வி
மையத்திலும் மாலைதோறும் ஒன்றரை மணி நேரம் குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர். இது இதற்கு முன்னர் நடந்திராதது. பாட்டு, விளையாட்டு, செயல்வழிக்கற்றல் எனப் பல்வேறு கற்பித்தல் வழிமுறைகள் மூலம் இல்லம் தேடிக் கல்வி இயக்கத் தன்னார்வலர்கள் குழந்தைகளுக்குக் கல்வி மீது ஆர்வமூட்டி உள்ளனர். இனி இல்லம் தேடிக் கல்வி இயக்கமானது, இன்னும் பல புதிய இலக்குகளை வகுத்துக்கொண்டு புதிய பாதையில் பயணிக்க இருக்கிறது.
பள்ளிப் பாடங்களுக்கு ஏற்ற வகையில் நடத்தப்படும் 'இல்லம் தேடிக் கல்வி'ச் செயல்பாடுகள் கற்றல் திறன்களை மேம்படுத்தும். இதன் ஒரு பகுதியாக வாசித்தல் திறனை வளர்க்கும் விதமாக நடத்தப்பட்ட 'ரீடிங் மாரத்தான் பெரிய வெற்றியையும், நல்ல பல அனுபவங்களையும் அளித்திருக்கிறது. இந்த மாரத்தானின்போது ' இல்லம் தேடிக் கல்வி' இயக்கத்தில் பயிலும் 33 லட்சம் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் கதைகள் படித்தார்கள். 33 லட்சம் குழந்தைகள் தினமும் ஒரு மணி நேரம் படித்தால் எத்தனை கோடி வார்த்தைகளைப் படித்திருப்பார்கள்! இந்தச் செயல்பாடு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ்) மூலம் இணைக்கப்பட்டது. இதற்கெனத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி 'கூகுள் ரீட் அலாங்' (Google read along) செயலி வழியாக இல்லம் தேடிக் கல்வி இயக்கத் தன்னார்வலர்கள் உதவியுடன் குழந்தைகள் பல கதைகளை வாசிக்கிறார்கள். கதைகள் குழந்தைகளின் கற்பனை உலகை விரிவுபடுத்தும். இது போன்ற ஒரு பெரும் முயற்சி இதுவரை எந்த நாட்டிலும் செய்யப்படவில்லை. இவற்றில் மட்டுமல்ல... இல்லம் தேடிக் கல்வி இயக்கம் முன்னெடுக்கும் எல்லாவற்றிலும் ஒரு சாதனை படைக்கும். ஏனெனில், மாண்புமிகு தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியின் தீர்க்கமான விதை இது!
மக்களுக்கான மகத்தான கல்வி!
புராதனம் என்ற பெயரில் வேத சிந்தனைகளையும் பஞ்சதந்திரக் கதைகளையும் ஒன்றிய அரசின் கல்விக் கொள்கை முன்வைக்கிறது. ஆனால், சமூக நீதியும் பகுத்தறிவுமே தமிழ் நாட்டுக் கல்விக் கொள்கையின் அடித்தளம் என்பது தி.மு.க. அரசு எடுத்துள்ள முடிவு. இந்தியக் கல்வி வரலாற்றில் மகத்தான தொடக்கம் இது. காலம் காலமாக மத்திய, உயர் மத்திய வர்க்கங்களின் பின்னால் போன கல்வி, இனி எளிய வீட்டுக் குழந்தைகளைத் தேடிவரும். அதற்கான ஒரு மையமாக இருக்கிறது 'இல்லம் தேடிக் கல்வி' இயக்கம்!