மெலட்டூர் உன்னதபுரீஸ்வரர் கோவில்
மகாவிஷ்ணு ராம அவதாரத்தின்போது இத்தலம் அடைந்து, சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை வழிபட்டு சாப நிவர்த்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது
தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் என்கிற உன்னதபுரத்தில் உள்ளது உன்னதபுரீஸ்வரர் கோவில். உன்னதம் என்றால் உயர்வு, மேன்மை என்பது பொருள். அவ்வகையில் மேன்மைமிகுந்த திருத்தலமாக இத்தலம் திகழ்கிறது. வெட்டாற்றின் கரையில் உள்ள இத்திருத்தலம் 'சப்த சாகர ஷேத்திரம்' என்றும் போற்றப்படுகிறது.
அன்னை பராசக்தி மகிஷாசுரனை வதம் செய்வதற்காக ஏழு சக்திகளாக உருவெடுத்தாள். அந்த ஏழு சக்திகளே 'சப்த மாதாக்கள்' ஆவர். அந்த சப்தமாதாக்களும் இங்கு வந்து ஈசனை வழிபட்டு, வரங்கள் பல பெற்றுள்ளனர். ஆதலால் இத்தலம் ஆதியில் 'சிவசக்தி பீட'மாகத் திகழ்ந்துள்ளது. தேவலோக தச்சனான மயனால், உன்னதபுரீஸ்வரர் ஆலயம் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நகரின் எல்லைகளில் உள்ள பிற தெய்வங்களையும் அவனே நிறுவியதாக சொல்கிறார்கள். இதனால் மேலான ஊர் என்னும் பொருளில் 'மேலத்தூர்' என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி 'மெலட்டூர்' என்று ஆனதாக கூறப்படுகிறது.
தல வரலாறு
ஈசனிடம் வரம் பெற்ற கோமுகாசுரன், பிரம்மனது வேதச் சுவடிகளை பறித்துக்கொண்டு, கடலில் சென்று ஒளிந்துகொண்டான். திருமால் மச்ச அவதாரம் எடுத்து, கோமுகாசுரனிடம் சண்டையிட்டு வேதங்களை மீட்டார். மிகப்பெரிய மீன் வடிவில் இருந்த திருமாலால், கடல் கலங்கி கடல்வாழ் உயிரினங்களுக்கு துன்பம் நேர்ந்தது. எனவே சிவபெருமான் மீனவராக வந்து, ஏழு கடலையும் மறைக்கும் படியான வலையை வீசி, மீன் வடிவில் இருந்த திருமாலை பிடித்தார். இதையடுத்து அவரின் வலிமை குறைந்தது. அப்போது ஈசன் உருவாக்கிய திருத்தலமே, உன்னதபுரம் என்று தல புராணம் தெரிவிக்கிறது.
சாப நிவர்த்தி
மகாவிஷ்ணு ஒரு சமயம் கயிலை சென்றபோது, அவரை நந்தியம்பெருமான் தடுத்து நிறுத்தினார். இதனால் அவர் நந்தியை கதாயுதத்தால் தாக்கினார். இதனால் கோபம் கொண்ட நந்தி, மகாவிஷ்ணுவை சாதாரண மனிதனாக பிறக்கும்படியும், அவரது வாகனமான கருடனை சாதாரண பறவையாக பிறக்கும்படியும் சபித்தார். அதன்படி கருட பகவான், உன்னதபுரம் திருத்தலத்தில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி, இத்தல பெருமானை வழிபட்டு, சாப நிவர்த்தி பெற்றார். பின் தனது பெயரில் கருட தீர்த்தம் உண்டாக்கியும் வழிபாடு செய்தார். மகாவிஷ்ணு ராம அவதாரத்தின்போது இத்தலம் அடைந்து, சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி, பெருமானை வழிபட்டு சாப நிவர்த்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது.
ஆலயத்தின் எதிரே சிவகங்கை தீர்த்தம் பிரமாண்டமாக அமையப்பெற்றுள்ளது. தோரணவாயிலை கடந்து சென்றால் கிழக்கு முகம் கொண்ட ஐந்து நிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. உள்ளே நேராக கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளது. அதை அடுத்து முகமண்டபம், இடை மண்டபம் இருக்கின்றன. தொடர்ந்து அர்த்த மண்டபம் மற்றும் கருவறை அமைந்துள்ளது. கருவறையிலே சுயம்பு நாதனாக உன்னதபுரீஸ்வரர் அருள்காட்சி தருகிறார். முக மண்டபத்தின் வடக்கு திசையில் தென் திசை பார்த்தபடி, சிவப்பிரியாம்பிகா தேவி அருள்பாலிக்கிறாள். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அவர் அருகே தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது.
இரண்டு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயம், தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
திருக்கருகாவூரில் இருந்து திட்டை குருஸ்தலம் செல்லும் வழியில், சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, மெலட்டூர் திருத்தலம்.