புற்று மண்ணால் உருவான அன்னை.. புன்னைநல்லூர் மாரியம்மன்
புன்னைநல்லூரில் மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக உற்சவ அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
தஞ்சாவூர் - திருவாரூர் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புன்னைநல்லூர் என்ற ஊரில் அருள்பாலிக்கிறாள் அன்னை புன்னை நல்லூர் மாரியம்மன்.
1680-ம் ஆண்டு, தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மன்னர் சமயபுரம் வந்து அங்கு அருள்புரியும் மாரியம்மனை தரிசித்துவிட்டு அன்று இரவு அங்கு தங்கினார். அயர்ந்து அவர் உறங்கி கொண்டிருந்தபோது அவர் கனவில் அன்னை தோன்றினாள்.
தஞ்சைக்கு ஐந்து கி.மீ தொலைவில் உள்ள புன்னை மரக்காட்டில் புற்று உருவாய் தான் அருள்பாலிப்பதாகவும் அங்கு வந்து தன்னை தரிசிக்கும்படியும் கூறி அன்னை மறைந்தாள். மறுநாள் தஞ்சை திரும்பிய மன்னர் தான் கனவில் கண்ட இடத்தை தேடி புறப்பட்டார். அங்குள்ள புன்னை வனக்காட்டில் எழுந்தருளியிருந்த புற்று அம்மனைக் கண்டுபிடித்தார்.
ஒரு கூரை கொட்டகை அமைத்து அம்மனை மக்கள் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்தார். அந்த இடத்திற்கு புன்னை நல்லூர் என்று பெயர் வைத்தார்.
பார்வை தந்த அன்னை
வெங்கோஜி மன்னருக்கு பின் அவரது மகன் துலஜ ராஜா பட்டத்திற்கு வந்தார். ஒரு சமயம் அவருடைய மகளுக்கு அம்மை நோய் கண்டது. என்ன வைத்தியம் பார்த்தும் நோயின் கடுமை குறையவில்லை. அந்த சிறுமியின் பார்வையும் அந்த நோயால் பறிபோனது.
மன்னர் மனம் வருந்தினார், வேதனைபட்டார், செய்வது அறியாது திகைத்து நின்றார். அன்று அவர் கனவில் ஒரு சிறுமி வந்தாள். உன் மகளுடன் என் சன்னதிக்கு வா என்று கூறினாள் அந்தச் சிறுமி.
மன்னருக்கு புரிந்தது. கனவில் வந்த சிறுமி வேறு யாருமல்ல. புன்னை நல்லூர் மாரியம்மன் தான் என உணர்ந்தார். மறுநாள் தன் மகளுடன் அன்னையின் சன்னதியில் போய் நின்றார். தீபம் ஏற்றி வழிபட்டார். கண்களில் கண்ணீர் வழிய மனம் உருகி அன்னையிடம் மன்றாடினார்.
அப்போது மின்னலாய் ஒரு ஒளி அவரை கடந்து அவரது மகளை அடைந்தது. அவர் மகள் பார்வையை மீண்டும் பெற்றாள்.
அன்னையின் கருணையை கண்டு மனம் சிலிர்த்தார் மன்னர். அதே இடத்தில் சுற்றுச் சுவர்களுடன் அன்னைக்கு ஓர் ஆலயம் கட்டினார்.
ஆலய அமைப்பு
புற்று உருவில் இருந்த அன்னைக்கு உருவம் கொடுக்க விரும்பினார் மன்னர். ஞானி சதாசிவ பிரம்மேந்திரரின் உதவியுடன் அம்மனுக்கு வடிவம் அமைத்து சக்கர பிரதிஷ்டையும் செய்தார்.
மூலஸ்தான அம்மன் புற்று மண்ணால் உருவானதால், மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக உற்சவ அம்மனுக்கு தான் அபிஷேகம் நடைபெறுகிறது.
அழகிய ராஜ கோபுரம், விமானம், மகா மண்டபம், நர்த்தன மண்டபம் மற்றும் மூன்று திருச்சுற்றுகளுடன் ஆலயம் அமைந்துள்ளது.
மகா மண்டபம் முகப்பில் கொடி மரமும் பலிபீடமும் உள்ளன. கருவறை வாசலில் துவார பாலகிகளின் சுதை வடிவ திருமேனிகள் உள்ளன. உள்ளே கருவறையில் அன்னை மாரியம்மன் மூக்குத்தி பளபளக்க நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். அன்னை தன் இரு கரங்களில் கத்தியையும் கபாலத்தையும் சுமந்து மறு இரு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள் புரிகின்றாள்.
அபிஷேக ஆராதனைகள்
அன்னைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தைல காப்பு அபிஷேகம் நடைபெறும். அப்போது ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அம்பாளை வெண் திரையில் வரைந்து அதில் அம்பாளை ஆவாகனம் செய்து அதற்குதான் அர்ச்சனை ஆராதனை நடைபெறும். இந்த நாற்பத்தி எட்டு நாட்களும் அன்னைக்கு தினமும் இரு வேளை சாம்பிராணி தைலம், புனுகு, ஜவ்வாது ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறும்.
தைலாபிஷேகம் நேரத்தில் அம்பாளுக்கு உக்கிரம் அதிகமாகும். அதை தவிர்க்க அன்னைக்கு தயிர், பல்லயம், இளநீர் வைத்து நைவேத்தியம் செய்வார்கள்.
ஆண்டுதோறும் வரும் அக்கினி நட்சத்திர நாட்களில் அம்மனின் முகத்தில் வியர்வை துளிகள் முத்து முத்தாக காணப்படுமாம். அதனால் அன்னை முத்து மாரியம்மன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறாள்.
முக்கிய நாட்களில் அன்னைக்கு 23 கிலோ எடை உள்ள தங்க கவசம் சாத்தப்படுவதுண்டு.
பிரார்த்தனை
திருக்கோவிலின் உட்புறம் வெல்லக் குளம் உள்ளது. உடம்பில் கட்டி அல்லது மரு உள்ளவர்கள் அன்னையை வேண்டி கொண்டு வெல்லத்தை கொண்டு வந்து இந்த குளத்தில் போடுவார்கள். வெல்லம் கரைவது போல் கட்டிகளும் பருக்களும் கரைந்து விடும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
வீட்டில் யாருக்காவது அம்மை நோய் கண்டால் இங்குள்ள உள் தொட்டி வெளித் தொட்டிகளுக்கு நீர் இறைத்து ஊற்றுவதாக வேண்டிக் கொண்டால் அம்மையின் உக்கிரம் படிப்படியாக குறைந்து அவர்கள் பூரண குணமாவது நிஜம்.
தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சார்ந்த இக்கோவிலுக்கு விடுமுறை நாட்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாய் வருவது உண்டு.
உற்சவம்
ஆடி மாதம் முத்து பல்லக்கு உற்சவமும் ஆவணி கடைசி ஞாயிறு தேரோட்டமும், புரட்டாசி மாதம் தெப்போற்சவமும், நவராத்திரி உற்சவமும் இங்கு வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
கோடைக்காலத்தில் பால் குடம் எடுத்து காவடி சுமந்து அன்னையை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்கின்றனர்.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படும் இந்த ஆலயத்தின் திருச்சுற்றில் விநாயகர், முருகன், காத்தவராயன், மதுரைவீரன், பேச்சியம்மன், ஐயனார் ஆகியோர் அருள்பாலிக்கினறனர்.
ஆலயம் காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணிவரை திறந்திருக்கும்.
தஞ்சையிலிருந்து இந்த ஆலயம் செல்ல நிறைய பஸ் வசதி உண்டு.
வேண்டியவர்களுக்கு வேண்டியதை அருளும் புன்னை நல்லூர் மாரியம்மனை நாமும் ஒரு முறை தரிசித்து பயன் பெறுவோமே.