மும்மூர்த்திகள் அருளும் ஆலயம்.. சிதம்பரம் ஆலயத்தின் சிறப்புகள்

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத்தின்போது சிற்சபையில் வீற்றிருக்கும் மூலவரே, உற்சவராக மாறி தேரில் அமர்ந்து வீதி உலா வருவார்.

Update: 2024-07-10 05:46 GMT

உயிர்கள் வாழ்வதற்கு பெரிதும் ஒத்திசைவாக இருப்பதில் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்னும் பஞ்சபூதங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. இவையாவும் இறைவனால் படைக்கப்பட்டதாக புராணங்கள் உரைத்த காரணத்தால், அவற்றை வணங்கும் மரபை நம் முன்னோர்கள் வகுத்தனர். திருவாரூர் தியாகராசர் நிலத்தின் அதிபதியாகவும், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் நீருக்கு அதிபதியாகவும், திருக்காளத்தி காளஹஸ்தீஸ்வரர் காற்றின் அதிபதியாகவும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் நெருப்பின் அதிபதியாகவும் விளங்குகின்றனர். அதே போல் ஆகாயத்தின் அதிபதியாக சிதம்பரம் நடராஜ பெருமான் உள்ளார். அந்த வகையில் இந்த ஆலயம் பஞ்ச பூதத் தலங்களில் ஆகாயத் தலமாக திகழ்கிறது.

தரிசிக்க முக்தி

ஒவ்வொரு தலத்திற்கும் வரலாறு இருப்பது போல, தனித்துவமும் சிறப்பும் இருக்கும். அந்த வகையில் திருவாரூரில் பிறந்தால் முக்தி கிடைக்கும். காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி கிடைக்கும். காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும். திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. அந்த வரிசையில் சிதம்பரம் நடராஜ பெருமான் கோவிலும் இணைந்திருப்பது சிறப்பானது. இந்த ஆலயத்தை தரிசிக்க முக்தி கிடைக்கும் என்கிறார்கள்.

பஞ்ச தாண்டவத் தலம்

ஆனந்த தாண்டவம் தொடங்கி பிரளய தாண்டவம் வரை சிவபெருமான் 108 தாண்டவம் ஆடியதாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவையாக இருப்பவை ஐந்து. இவை பஞ்ச தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பஞ்ச தாண்டவங்கள் ஆடிய திருத்தலங்களை பஞ்ச சபைகள் அல்லது பஞ்ச அம்பலங்கள் என்று குறிப்பிடுகின்றனர். திருவாலங்காடு, மதுரை, திருநெல்வேலி, திருக்குற்றாலம் மற்றும் சிதம்பரம் ஆகியவை அந்த பஞ்ச சபைகளாக கூறப்படுகின்றன.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வர் ஆலயத்தில் ரஜதசபை எனப்படும் வெள்ளி சபையில் (வெள்ளியம் பலம்) சந்தியா தாண்டவத்தை இறைவன் ஆடியுள்ளார். திருவாலங்காடு வடவாரண்யேஸ்வரர் ஆலயத்தில் ரத்தின சபையில் (ரத்தின அம்பலம்) காளி தாண்டவத்தையும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தாமிரசபையில் (தாமிர அம்பலம்) முனி தாண்டவத்தையும், திருக்குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்தில் சித்திரசபையில் (சித்திர அம்பலம்) திரிபுரா தாண்டவத்தையும் சிவபெருமான் ஆடி அருளியுள்ளார். அதே போல் சிதம்பரம் சிற்சபையில் (பொன்னம்பலம்) ஆனந்த தாண்டவத்தை ஆடி அருள்பாலிக்கிறார். பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் ஆகியோர் காணும்பொருட்டு, தைப்பூசத் திருநாள் ஒன்றில் இறைவன் இந்தக் காட்சியை இத்தலத்தில் காட்டியதாக கூறப்படுகிறது. இதை நாதாந்த தாண்டவம் என்று அழைக்கிறார்கள்.

சிதம்பர ரகசியம்

சிதம்பரத்தில் இறைவன் உருவமாகவும், அருவமாகவும், அருவுருவமாகவும் அருள்பாலிக்கிறார். உருவம் நடராஜர், அருவுருவம் ஸ்படிக லிங்கம், அருவம் சிதம்பர ரகசியம். சிற்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாசல். இதில் உள்ள திரை அகற்றப்பட்டு ஆரத்தி காட்டப் பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாது. தங்கத்தால் ஆன வில்வ தள மாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும். மூர்த்தி இல்லாமலேயே வில்வதளம் தொங்கும். இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் (அருவமாக) இருக்கிறார் என்பதுதான். அகன்ற பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை உருவில் வழிபடுவதைவிட, வெறும் வெளியை (அருவத்தையே) இறைவனாக வழிபடுவதே சிதம்பர ரகசியமாகும். சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்கரத்தையும், சிவனுக்குரிய சிவசக்கரத்தையும் இணைத்து, ஒன்றாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உண்டு. இந்த சக்கரத்தில் நடராஜப்பெருமான் ஐக்கியமாகி, தன் ஆனந்த நடனத்தினால் உலகை படைத்து, காத்து, மறைத்து, அழித்து அருளிக்கொண்டிருக்கிறார்.

சிதம்பர ரகசியம்: சித்+அம்பரம்= சிதம்பரம். சித்-அறிவு. அம்பரம்-வெட்டவெளி.

மும்மூர்த்திகள்

ஒரே இடத்தில் நின்று சிவன், விஷ்ணு இருவரையும் வழிபடும் வகையில் இரு திருச்சன்னிதிகளும் அருகருகே அமையப்பெற்றுள்ள ஒரே தலம் சிதம்பரம் ஆலயம். சைவத்தின் கடவுளான தில்லை நடராஜரும், வைணவத்தின் கடவுளான தில்லை கோவிந்தராஜரும் அருகருகே உள்ளனர். நடராஜர் பொன்னம்பலத்தில் இருந்து அருள்பாலிப்பது போல, தெற்றியம்பலத்தில் இருந்து கோவிந்தராஜ பெருமாள் அருள்பாலிக்கிறார். பெருமாள் சயனித்துள்ள இடம் நந்திவர்ம பல்லவனால் கட்டப்பட்ட திருமாளிகையாகும். 108 திவ்ய தேசங்களில் இது தில்லை திருச்சித்திரக் கூடம் என்று அழைக்கப்படுகிறது. நடராஜரின் பொன்னம்பல சுற்றில் கிழக்கு பதியில் சண்டிகேஸ்வர நாயனாருடன் சேர்ந்து அமர்ந்தபடி பிரம்மதேவர் காட்சி தருகிறார்.

உடலின் அமைப்பு

மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சன்னிதிக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள், மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கையைக் குறிக்கும் அளவில் உள்ளது. பொன்னம்பலத்தில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்புகளைக் குறிக்கிறது. கோவிலில் உள்ள 9 வாசல்கள், மனித உடலிலுள்ள 9 துவாரங்களை நினைவுபடுத்துகிறது. இதுதவிர ஆன்மிக ரீதியான அமைப்பும் உண்டு. ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகளும், 64 கலைகளின் அடிப்படையில் சாத்துமரங்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், பஞ்ச பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தேரோட்டத்தில் உலாவரும் மூலவர்

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் வருடத்திற்கு இரண்டு முறை தேரோட்டமும், தரிசனமும் நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் மற்றொரு பெருமை யாதெனில், தேரோட்டத்தின் போது சிற்சபையில் வீற்றிருக்கும் மூலவரே, உற்சவராக மாறி தேரில் அமர்ந்து வீதி உலா வருவார். மூலவர் வெளியில் வருவது வேறு எந்த ஆலயத்திலும் காணமுடியாத ஒன்றாகும்.

10 தீர்த்தக் குளங்கள்

மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்பு பெற்றது சிதம்பரம் கோவில். இந்த ஆலயத்தில் 10 தீர்த்தங்கள் உள்ளது. சிவகங்கை, பரமானந்தகூபம், வியாக்ரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சிவப்பிரியை தீர்த்தம், புலிமடு தீர்த்தம், குய்யதீர்த்தம், திருப்பாற்கடல் என்பவைகளே அந்த 10 தீர்த்தங்களாகும்.

Tags:    

மேலும் செய்திகள்