பெண் அர்ச்சகர்கள், ஓதுவார்கள்!

தமிழ்நாட்டில் இப்போது 20 அர்ச்சகர் பயிற்சி பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் தற்போது 10 கோவில்களில் தேவாரம், திருவாசகம், திவ்யபிரபந்தம், பாசுரங்கள் பாட 10 பெண் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2023-09-25 19:56 GMT

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் 3 பெண்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்ததையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், "பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்றுவந்தாலும், அவர்கள் நுழைய முடியாத இடங்களாக கோவில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோவில்களிலும் இதேநிலை இருந்தது. ஆனால், அந்நிலை இனி இல்லை!. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியவில்லையே என பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை, நமது திராவிட மாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனி கருவறைக்குள்" என்று பெருமையோடு கூறியிருந்தார்.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கோவில்களும், எண்ணற்ற கிராம கோவில்களும் உள்ளன. அங்கு பூஜைகள், அபிஷேகம் செய்ய பூசாரிகள், குருக்கள், ஓதுவார்கள், அர்ச்சகர்கள் இருப்பார்கள். மூலவர் இருக்கும் கருவறைக்குள் அவர்கள் மட்டுமே செல்ல முடியும். இதுவரையில் அர்ச்சகர்கள், ஓதுவார்களெல்லாம் ஆண்களாகவே இருந்தார்கள். அதுபோல சில குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே அர்ச்சகர்களாக இருக்க முடியும் என்றநிலை காலகாலமாக இருந்தது. தந்தை பெரியார் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று, தான் உயிரோடு இருக்கும் வரை வலியுறுத்திக்கொண்டே இருந்தார். இதற்காக பல போராட்டங்களை நடத்தியதுடன், பல மாநாடுகளிலும் தீர்மானமாக கொண்டுவந்தார். இந்த நிலையில், கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன், இதற்கான சட்டத்தை நிறைவேற்றினாலும், அந்த சட்டம் சுப்ரீம் கோர்ட்டில் சாதகமான பதில் கிடைக்காமல் முடக்கப்பட்டது. மீண்டும் சட்டப்போராட்டங்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியிலும் நடந்தன.

பெரியார் மறைந்தபோது, கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலையை குறிப்பிட்டு, "தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றாமல், அவரை புதைத்துவிட்டோம்" என்று வருத்தத்துடன் கூறினார். அனைவருடைய கனவும் இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நனவாகிவிட்டது.

தமிழ்நாட்டில் இப்போது 20 அர்ச்சகர் பயிற்சி பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் தற்போது 10 கோவில்களில் தேவாரம், திருவாசகம், திவ்யபிரபந்தம், பாசுரங்கள் பாட 10 பெண் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த 10 கோவில்களிலும் இப்போது இந்த பெண் ஓதுவார்கள் பாடும் இறைபக்தி பாடல்கள் இனிமையாக கேட்கின்றன. மேலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதசாமி கோவில் நடத்தும் அர்ச்சகர் பயிற்சி பள்ளிக்கூடத்தில் படித்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரி பெண்கள் என்.ரஞ்சிதா, எச்.ரம்யா, சி.கிருஷ்ணவேணி ஆகியோருக்கு பயிற்சி முடித்ததற்கான சான்றிதழை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்.

இவர்கள் பணி அனுபவம் பெற்று தங்களை செம்மைப்படுத்திக்கொள்ளும் வகையில், மூத்த அர்ச்சகர்களின் கீழ் ஓராண்டுக்கு அனுபவம் பெற, மாத ஊக்கத்தொகையாக ரூ.8 ஆயிரம் வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. இந்த ஓராண்டு பயிற்சிக்கு பிறகு அவர்கள் கோவில்களில் அர்ச்சகர்களாக பணிபுரிய உள்ளார்கள். இந்த ஆண்டும் அர்ச்சகர் பயிற்சியில் 15 பெண்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். அனைத்து சாதியினரையும் தாண்டி, இப்போது பெண்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டதன் மூலம் பெரியார் கண்ட கனவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.

அம்மன் கோவில்கள், பெண் தெய்வங்கள் சக்தியோடு இருக்கும் தமிழ்நாட்டில், நம் தெய்வங்களுக்கு பூஜை செய்ய பெண் அர்ச்சகர்கள் இல்லையே, தேவாரம், திருவாசகம் பாட பெண் ஓதுவார்கள் இல்லையே என்ற குறை இப்போது தமிழ்நாட்டில் நீங்கிவிட்டது. சமூகநீதி நிலை நாட்டப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்