வாக்காளர்களை கவருமா காங்கிரஸ் தேர்தல் அறிக்கை?

எந்த பிரசாரம் என்றாலும் அதற்கு வலு சேர்ப்பது தேர்தல் அறிக்கைதான்.

Update: 2024-04-08 00:33 GMT

சென்னை,

நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தல் மிகவும் பலத்த எதிர்பார்ப்புகளை நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014, 2019 தேர்தல்களில் வெற்றி பெற்று, அதுவும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருமுறை தொடர்ந்து ஆட்சி அமைத்த பா.ஜனதா இந்த முறையும் 3-வதாக வெற்றி பெற்று 'ஹாட்ரிக்' வெற்றியை அடையுமா?, ஜவஹர்லால் நேரு போல தொடர்ந்து 3 முறை பிரதமரான பெருமையை நரேந்திரமோடி பெறப்போகிறாரா? அல்லது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருமுறை ஆட்சியில் இருந்த பிறகு 3-வதாக நடந்த தேர்தலில் தோல்வியுற்று பா.ஜனதா ஆட்சி அமைத்ததுபோல, இருமுறை ஆட்சியில் இருந்த பா.ஜனதாவை இந்த முறை தோற்கடித்து நாங்கள் ஆட்சியை பிடித்துவிடுவோம் என்று கூறும் 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வரப்போகிறதா? என்பதை பார்க்கப்போவதைத்தான் ஒட்டுமொத்த நாடே ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறது.

தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துவிட்டன. எந்த பிரசாரம் என்றாலும் அதற்கு வலு சேர்ப்பது தேர்தல் அறிக்கைதான். தமிழ்நாட்டில் கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததற்கு முக்கிய காரணம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற 505 வாக்குறுதிகள்தான். அதுபோல, இப்போதும் காங்கிரஸ் கட்சி 45 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை குழு தலைவர் தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரான முன்னாள் மத்திய நிதி மந்திரியாக இருந்து பழுத்த அனுபவம் பெற்ற ப.சிதம்பரம்.

இந்த தேர்தல் அறிக்கை இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கான நீதி, சமூக நீதி ஆகிய 5 முக்கிய அம்சங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட நீதியின் 5 தூண்களின் மீது எழுப்பப்பட்ட நியாயப்பத்திரம் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. மொத்தம் 25 வாக்குறுதிகள் இந்த தேர்தல் அறிக்கையில் நாட்டு மக்களின் அனைத்து பிரிவினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் சாதிவாரி சமூக - பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படும், 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பு உயர்த்தப்பட சட்ட திருத்தம் கொண்டுவரப்படும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும் விரிவுபடுத்தப்படும், சிறுபான்மையினருக்கு ஆடை, உணவு, மொழி மற்றும் தனிநபர் சட்டங்களில் உரிமை வழங்கப்படும், நாடு முழுவதும் உள்ள ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம் அமல்படுத்தப்படும், மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, 100 நாள் வேலை திட்டத்தில் தினசரி சம்பளம் ரூ.400, 'நீட்' தேர்வு நடத்துவது மாநில அரசுகளின் விருப்பம், கல்வி கடன் ரத்து என்பவை உள்பட அனைத்து தரப்பையும் பார்க்கவைக்கும் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அறிக்கையில் உள்ள பல வாக்குறுதிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் இருக்கின்றன. மிக முக்கியமாக 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' கிடையாது என்பது தெளிவாக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த தேர்தல் அறிக்கை பொய்களின் மூட்டை என்று பிரதமர் நரேந்திரமோடியால் வர்ணிக்கப்பட்டுள்ளது. தேர்தல் என்பது ஒரு திருமணம் போன்றது. அதில் மாப்பிள்ளை தேர்தல் அறிக்கைதான். வாக்காளர்கள்தான் மணப்பெண். மாப்பிள்ளையை மணப்பெண்ணுக்கு பிடித்தால்தான் திருமணம் நடக்கும் என்பதுபோல, இந்த தேர்தல் அறிக்கையான மாப்பிள்ளையை மணப்பெண்ணுக்கு பிடிக்கிறதா? கவர்ந்து இழுக்கிறதா? என்பது ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவு வரும்போதுதான் தெரியும்.

Tags:    

மேலும் செய்திகள்