தமிழ்நாடு மின்வாகன கொள்கை
எந்த ஒரு துறையிலும் வளர்ச்சி காண வேண்டும் என்றாலும், அதற்கென தனிக்கொள்கை வகுத்து, ஒரு இலக்கை நிர்ணயித்து, அரசு செயலாக்கினால்தான் முன்னேற்றத்தை காணமுடியும்.;
எந்த ஒரு துறையிலும் வளர்ச்சி காண வேண்டும் என்றாலும், அதற்கென தனிக்கொள்கை வகுத்து, ஒரு இலக்கை நிர்ணயித்து, அரசு செயலாக்கினால்தான் முன்னேற்றத்தை காணமுடியும். குறிப்பாக தொழில் வளர்ச்சி காண, தனிக்கொள்கைகள் வகுப்பது சாலச்சிறந்ததாகும். தமிழ்நாடு தற்போது தொழில் வளர்ச்சியில் பீடுநடை போட்டு வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டையில் தன் அறையில் வைக்கப்பட்டுள்ள ஒரு 'டேஷ் போர்டு' என்று சொல்லப்படும் தகவல் பலகையில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பார்த்து, தொழில் வளர்ச்சியை ஆய்வு செய்து வருகிறார். தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வி.விஷ்ணு ஆகியோர் தமிழ்நாட்டில் ஏராளமான தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும் என்பதில் அதிக முனைப்பு காட்டி வருகிறார்கள்.
தமிழக அரசை பொருத்தவரையில் பெட்ரோல்-டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்வாகனங்களின் உற்பத்தியும், சுற்றுச்சூழலை பாதிக்காத அதன் பயன்பாடும் அதிகமாக இருக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி வருகிறது. இந்த உயரிய நோக்கில் தமிழக அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் தனியாக மின்வாகன கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். மின்வாகன உற்பத்தித்துறையில் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடுகள் மற்றும் 1½ லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு இந்த மின்வாகன கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்கள் மின்வாகன நகரங்களாக மேம்படுத்தப்படுகிறது. இதன்மூலம் இந்த பகுதிகளில் புதிய மின்வாகன தொழிற்சாலைகள், உதிரிபாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் வர இருக்கின்றன. புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படும் விதமாக ஏராளமான சலுகைகள், வரி விலக்கு, முத்திரை கட்டண விலக்கு, நில விலையில் மானியம் போன்ற பல சலுகைகள், ஊக்கத்தொகைகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுபோல் மின் வாகனங்களை வாங்குபவர்களுக்கும், 'சார்ஜிங்' நிலையங்களை தொடங்குபவர்களுக்கும் பல வரிச்சலுகைகள், கட்டண சலுகைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தற்போது தனியாரின் மின்வாகன கார்கள், ஸ்கூட்டர்கள் மட்டுமே தமிழ்நாட்டில் ஓடுகின்றன. வணிக ரீதியான லாரிகள், பஸ்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மின்வாகனங்களாக பதிவு செய்யப்படவில்லை. இந்த புதிய மின்வாகன கொள்கையின்படி அந்த வாகனங்களையும் பதிவுசெய்ய வழிவகுக்கப்படுகிறது. அத்தகைய வாகனங்களுக்கு வரிச்சலுகை மட்டுமல்லாமல் ஊக்கச்சலுகையும், 'பேட்டரி சார்ஜிங்' செய்ய வசதியாக 'சார்ஜிங்' நிலையங்கள் அமைக்கவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆக, இந்த புதிய மின்வாகன கொள்கையால், தமிழ்நாட்டில் புதிய மின்வாகன தொழிற்சாலைகள், பரவலாக மின்நகரங்களை மையமாக வைத்து தொடங்கப்படும், ஏராளமான தனியார் வாகனங்கள் மட்டுமல்லாமல் வணிக ரீதியான வாகனங்களும் அதிகமாக விரைவில் வலம் வரும் என்பதில் சந்தேகமேயில்லை. அ.தி.மு.க. ஆட்சியிலும் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி இதுபோல ஒரு மின்வாகன கொள்கையை 2019-ல் வெளியிட்டார். அப்போதும் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்ப்பதும், 1½ லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதுமே இலக்கு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மொத்தத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த புதிய மின்வாகன கொள்கை, தமிழ்நாட்டில் மின்வாகன தொழிற்சாலைகள் புதிதாக தொடங்குவதை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் என்ற வகையில் மிக மிக வரவேற்புக்குரியதாகும்.