உயிர்களை காவு வாங்கும் விஷ சாராயம்

Update:2023-05-18 00:30 IST

மதுப்பழக்கம் என்பது சரித்திர காலம் தொட்டே இருக்கிறது. மதுப்பழக்கம் கொண்டவர்களை அதில் இருந்து மீட்பது என்பது மிக கடினம். இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும் 'மெத்தனால்' கலந்த விஷ சாராயத்தை குடித்த 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் 55 பேர் உள்பட மேலும் சில மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களையும் சேர்த்து 66 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்த பகுதிகளில் கள்ளச்சாராயம் என்பது இப்போது மட்டுமல்ல ஆண்டாண்டு காலமாகவே இருந்து இருக்கிறது.

கள்ளச்சாராயம் காய்ச்சினால் கூட கண்டுபிடித்து விடலாம். ஆனால் இப்போது நடந்த சம்பவங்களில் 'மெத்தனால்' என்ற தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் எரிசாராயத்தை தண்ணீரில் கலந்து தயாரித்த விஷ சாராயத்தை குடித்ததால் உயிரிழந்துள்ளனர். எல்லா இடங்களிலும் 'டாஸ்மாக்' கடைகள் இருக்கிறதே, பிறகு ஏன் இந்த விஷ சாராயத்தை மக்கள் குடித்தார்கள்? என்று கேள்வி எழலாம். இந்த விஷ சாராயத்தை குடித்தவர்களெல்லாம் ஏழை-எளிய மக்கள். அவர்களால் 'டாஸ்மாக்' கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களை வாங்க வசதியில்லை என்ற காரணத்தால்தான், குறைந்த விலையில் கிடைத்த இந்த விஷ சாராயத்தை நாடியிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்காகத்தான் முன்பு சாராய கடைகளும், கள்ளுக்கடைகளும் இருந்தன.

அண்ணா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும், படுபாதாளத்தில் இருந்த தமிழக அரசின் நிதிநிலையை சமாளிக்கவும், மதுவிலக்கை அமல்படுத்துவதால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை சரிக்கட்டவும் சிறப்பு நிதி கேட்டார். அப்போது மத்திய அரசாங்கம் மறுக்கவே, 1971-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி மதுவிலக்கு சட்டத்தை தளர்த்தி, கள்-சாராய கடைகளை திறக்க அனுமதி அளித்தார். ஒரு லிட்டர் சாராயம் ரூ.10-க்கும், ஒரு லிட்டர் கள் ரூ.1-க்கும் விற்க அனுமதி அளிக்கப்பட்டது. அரசுக்கும் வருமானம் வந்தது. கள்ளச்சாராயமும் ஓரளவுக்கு ஒழிந்தது. அப்போது ஏற்பட்ட விமர்சனங்களால் 1974-ம் ஆண்டு செப்டம்பர் 4-ந்தேதி கள்-சாராய கடைகளை மூடி மீண்டும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினர்.

பின்பு எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தபிறகு மதுவிலக்கு தளர்த்தப்பட்டு 'டாஸ்மாக்' கடைகள் திறக்கப்பட்டன. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஆட்சி பொறுப்பை ஏற்ற கருணாநிதி அரசு 1989-ம் ஆண்டில் மலிவு விலை மதுவை அறிமுகம் செய்தாலும், அதன்பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மலிவு விலை மது விற்பனையை தடை செய்துவிட்டு தொடர்ந்து விஸ்கி, பிராந்தி, ரம் போன்ற உள்நாட்டில் தயாராகும் வெளிநாட்டு மது விற்பனையை தொடர செய்தார்.

ஆக மதுவிலக்கு என்பது எல்லா அரசுகளுக்கும் ஒரு எட்டாக்கனி. ஓரளவுக்கு வசதி படைத்தவர்களால் 'டாஸ்மாக்' கடைகளில் மது வாங்க முடிகிற சூழ்நிலையில், அவ்வளவு தொகை இல்லாதவர்கள் இதுபோல கள்ளச்சாராயத்தை குடிக்கிறார்கள். இதுபோன்ற மக்களுக்காக கள் கடைகளை திறக்கலாமே... என்ற கோரிக்கை இப்போது வலுத்து வருகிறது. கள்ளுக்கடைகளை திறந்தால் பனை ஏறும் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் வருவாய் கிடைக்கும், இப்போது கள்ளுக்கு இருக்கும் தடையை நீக்கினால் குறைந்த விலையில் விற்கமுடியும், உடல் நலத்துக்கும் கேடு இல்லை என்கிறார் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி. அதுபோல மலிவு விலை மது விற்பனையையும் மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பதும் பரவலான கோரிக்கையாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்