பள்ளிக்கூடத்துக்கு ஏன் வரவில்லை?

பள்ளிக்கூடத்துக்கு வராத மாணவர்களை இடைநிற்றல் மாணவர்களாக கருத்தில் கொண்டு, அவர்களை மீண்டும் பள்ளிக்கூடங்களுக்கு அழைத்துக் கொண்டுவர ஆசிரியர்கள், கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர்களை வீடு வீடாக அனுப்பும் பணி இப்போது தொடங்கியுள்ளது.;

Update:2022-12-26 00:43 IST

"கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" என்று எழுதினார், கி.பி. 1564 முதல் கி.பி.1604-ம் ஆண்டுவரை 40 ஆண்டுகள் ஆட்சி செய்த, பாண்டிய மன்னர்களில் ஒருவரான அதிவீரராம பாண்டியன். "பிச்சை எடுத்தாவது கல்வி கற்க வேண்டும்" என்பதுதான் இதன் பொருள். ஆனால், தமிழ்நாட்டில் யாரும் பிச்சை எடுத்து படிக்க வேண்டிய சூழ்நிலை இல்லை. இலவச கல்வி, சத்துணவு, சீருடை, பாடப்புத்தகங்கள், புத்தகப்பை, சைக்கிள், லேப்டாப் என்று அனைத்தையுமே மாணவர்களுக்கு அரசு வழங்குகிறது. இப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்விக்கு, அதிலும் பள்ளிக்கூட கல்விக்கு அதிக முன்னுரிமை கொடுத்து பட்ஜெட்டில் கணிசமான நிதியை ஒதுக்கியுள்ளார்.

தி.மு.க.வின் பழம்பெரும் தலைவரும், அமைச்சருமாக இருந்த மறைந்த அன்பில் தர்மலிங்கத்தின் பேரனான துடிப்புள்ள இளைஞர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பள்ளிக்கூட கல்வி அமைச்சராக்கியுள்ளார். எங்கு சுற்றுப்பயணம் செய்தாலும், பள்ளிக்கூடங்களுக்கு சென்று பார்வையிட அவர் தவறுவதில்லை. சமீபத்தில் திருநெல்வேலிக்கு பொருநை இலக்கிய திருவிழாவில் கலந்துகொள்ள சென்ற அவர், மேற்கு தொடர்ச்சி மலையில் வாழுகின்ற பழங்குடியினரான காணி சமூக மக்களின் ஆவண படத்தைப் பார்த்துவிட்டு, உடனடியாக அங்குசெல்ல மலைமீது கால்நடையாக ஏறி அந்த மக்களை சந்தித்தார். அமைச்சருடன் இந்த பகுதிக்கு ஏற்கனவே சென்றிருந்த திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் விஷ்ணுவும் சென்றார்.

அமைச்சர் தங்களை தேடி இவ்வளவு சிரமப்பட்டு வந்தது, அந்த மக்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அங்குள்ள பிள்ளைகள் அனைவரும் பள்ளிக்கூடங்களுக்கு செல்கிறார்களா? என்று கேட்டறிந்தார். அங்குள்ள குழந்தைகள் எல்லாம், காரையாரில் உள்ள அரசு உண்டு உறைவிட பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்கள் என்பதை கேட்டறிந்து, திரும்பிவரும் வழியில் அந்த பள்ளிக்கூடத்துக்கும் சென்று, வகுப்பறையில் மாணவர்கள் உட்காரும் பெஞ்சில் அமர்ந்து, மாணவர்களிடம் அவர்களின் தேவைகளைக் கேட்டு அன்போடு பேசினார்.

அத்தகைய பணிகளை செய்துவரும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவின்பேரில், இப்போது தமிழ்நாட்டிலுள்ள 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில், 30 நாட்களுக்கு மேல் பள்ளிக்கூடத்துக்கு வராத மாணவர்களை இடைநிற்றல் மாணவர்களாக கருத்தில் கொண்டு, அவர்களை மீண்டும் பள்ளிக்கூடங்களுக்கு அழைத்துக் கொண்டுவர ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கல்வி தன்னார்வலர்கள், சிறப்பு பயிற்சியாளர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர்களை வீடு வீடாக அனுப்பும் பணி இப்போது தொடங்கியுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 11-ந்தேதி வரை, இவ்வாறு வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இதில், இதுவரை பள்ளிக்கூடம் செல்லாதவர்கள் மற்றும் மாற்றுத்திறனுடையவர்கள் பற்றிய கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படுகிறது. வெறும் கணக்கெடுப்போடு விட்டுவிடாமல், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி மையங்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு, மீண்டும் பள்ளிக்கூடங்களில் சேர்க்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 18 வயது வரையிலான குழந்தைகள் யாரும் பள்ளிக்கூடங்களுக்கு செல்லாமல் இருக்கக்கூடாது என்ற குறிக்கோளை லட்சியமாக கொண்டிருக்கிறார். அதை நிறைவேற்ற தமிழகத்தில் மட்டும் அமல்படுத்தப்படும் புதுமையான இந்த திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என்கிறார், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

Tags:    

மேலும் செய்திகள்