பா.ஜனதா ஆளப்போகும் இன்னொரு மாநிலம் !

பா.ஜனதா ஆளும் மாநிலங்கள் பட்டியலில் இப்போது ஒடிசா மாநிலமும் சேர்ந்திருக்கிறது.;

Update:2024-06-08 06:38 IST
BJP will rule another state!

சென்னை,

நடந்து முடிந்த 18-வது மக்களவை தேர்தலும், அதோடு 4 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலும் பல ஆச்சரியங்களையும், அதிர்ச்சியையும் கொடுத்தது. மக்களவை தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மையை பெறாவிட்டாலும், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ஆந்திர முதல்-மந்திரியாக பதவி ஏற்கவுள்ள சந்திரபாபு நாயுடு போன்றோரின் ஆதரவோடு ஆட்சி அமைக்கப்போகிறது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி இருக்கிறார். இப்போது பா.ஜனதாவின் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலமாக ஆந்திராவும், பீகாரும் இருக்கின்றன. தற்போது, 14 மாநிலங்களில் பா.ஜனதாவின் அரசு இயங்குகிறது. அதுபோல, 4 மாநிலங்களில் பா.ஜனதா இடம்பெறும் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

பா.ஜனதா ஆளும் மாநிலங்கள் பட்டியலில் இப்போது ஒடிசா மாநிலமும் சேர்ந்திருக்கிறது.இங்கு பிஜூ பட்நாயக் 27 ஆண்டுகளுக்கு முன்பு முதல்-மந்திரியாக இருந்தார். அவர் மறைவுக்கு பிறகு, அவருடைய மகன் நவீன் பட்நாயக் அரசியலுக்கு வந்தார். அவர் பிஜூ ஜனதா தளம் என்ற பெயரில் கட்சி தொடங்கி, கடந்த 5 சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று, 2000-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 24 ஆண்டுகள் 85 நாட்கள் முதல்-மந்திரியாக இருந்தார். இதுவரை அதிக காலம் முதல்-மந்திரியாக இருந்தவர், சிக்கிம் மாநிலத்தில் ஜனநாயக முன்னணியின் முதல்-மந்திரியாக இருந்த பவன்குமார் சாம்லிங்தான். அவர் 24 ஆண்டுகள் 165 நாட்கள் முதல்-மந்திரியாக இருந்திருக்கிறார். அவருடைய பதவி காலத்துக்கும், நவீன் பட்நாயக்கின் பதவி காலத்துக்கும் இடையே வித்தியாசம் 80 நாட்கள்தான். நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவிலேயே அதிக காலம் தொடர்ந்து முதல்-மந்திரியாக இருந்தவர் என்ற முத்திரையை பதித்திருப்பார்.

ஆனால், நடந்து முடிந்த தேர்தல் ஒடிசாவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. 5 முறை தொடர்ந்து முதல்-மந்திரியாக இருந்த நவீன் பட்நாயக்கால் 6-வது முறையாக வெற்றி பெற முடியவில்லை. அரசியலில் 2000-ம் ஆண்டு முதல் இதுவரை தோல்வியையே பார்க்காத நவீன் பட்நாயக், இப்போது முதல் முறையாக தோல்வியை சந்தித்து இருக்கிறார். தேர்தலுக்கு முன்பு பா.ஜனதா, நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துக்கொள்ள நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், இரு கட்சிகளும் எதிரும் புதிருமாக போட்டியிட்டன. இந்த மாநிலத்தில், மொத்தம் உள்ள 147 இடங்களில், பா.ஜனதா 78 இடங்களிலும், பிஜூ ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது.

ஆட்சியமைக்க 74 இடங்கள் போதும் என்ற நிலையில், தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜனதா அரியணை ஏறுகிறது. நவீன் பட்நாயக்கின் வலது கரமாகவும், நிழலாகவும் திகழ்ந்துவரும் தமிழ்நாட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டியனை சுற்றித்தான் பிரதமர் நரேந்திரமோடி முதல் அனைத்து பா.ஜனதா தலைவர்களின் பிரசாரமும் இருந்தது. 'ஒடிசாவில் தமிழ் பேசும் ஒருவர்தான் ஆட்சி செய்கிறார். ஒடியா மொழி பேசுபவர் ஆட்சி செய்யவில்லை' என்றும், 'பூரி ஜெகநாதர் கோவிலின் கஜானா சாவியை காணவில்லை. அது தமிழ்நாட்டில்தான் இருக்கிறது' என்றும் பேசப்பட்டது, ஒடிசா மக்களின் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்திவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். எப்படியோ, 6-வது முறையாக முதல்-மந்திரியாகும் வாய்ப்பு நவீன் பட்நாயக்குக்கு பறிபோய்விட்டது, பா.ஜனதா வெற்றிக் கணக்கில் இன்னொரு மாநிலம் சேர்ந்துவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்