உலக டேபிள் டென்னிஸ் தரவரிசை: 24-வது இடத்துக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா

உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 24-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Update: 2024-05-14 19:05 GMT

புதுடெல்லி,

உலக டேபிள் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. அதன்படி பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்திய முன்னணி வீராங்கனை மணிகா பத்ரா 15 இடங்கள் ஏற்றம் கண்டு 24-வது இடத்தை பிடித்துள்ளார்.

28 வயது மணிகா பத்ரா கடந்த வாரம் நடந்த சவுதி ஸ்மாஷ் போட்டியில் முன்னாள் உலக சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்தவருமான வாங் மான்யுவை (சீனா) வீழ்த்தியதுடன் கால்இறுதிக்கு முன்னேறி அசத்தினார். இந்த சிறப்பான செயல்பாட்டின் மூலம் அவர் முன்னேற்றம் கண்டுள்ளார்.

உலக தரவரிசையில் டாப்-25 இடங்களுக்கு வந்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை சொந்தமாக்கினார். இது மணிகா பத்ராவின் சிறந்த தரநிலையாகும். அத்துடன் சக வீராங்கனை ஸ்ரீஜா அகுலாவை (41-வது இடம்) பின்னுக்கு தள்ளி மீண்டும் இந்தியாவின் 'நம்பர் ஒன்' இடத்தை தனதாக்கினார்.

இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு இந்திய வீரர்களில் சத்யன் மட்டும் டாப்-25 இடத்தை பிடித்து இருந்தார். 'டாப்-25 இடத்துக்கு முன்னேறி சாதித்து இருப்பது தனது நம்பிக்கையை நிச்சயம் அதிகரிக்கும். பயிற்சியாளர் உள்பட தனக்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி' என்று மணிகா பத்ரா தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர் சரத் கமல் 3 இடம் சரிந்து 40-வது இடம் பெற்றுள்ளார். இந்திய வீரர்கள் மானவ் தாக்கர் 2 இடம் சறுக்கி 62-வது இடமும், ஹர்மீத் தேசாய் ஒரு இடம் உயர்ந்து 63-வது இடமும் பெற்றுள்ளனர்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி-அஹிகா முகர்ஜி இணை ஒரு இடம் முன்னேறி 13-வது இடம் பிடித்துள்ளது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் மானவ் தாக்கர்-மனுஷ் ஷா ஜோடி 3 இடம் சரிந்து 15-வது இடம் பெற்றுள்ளது. கலப்பு இரட்டையர் பிரிவில் மணிகா பத்ரா-சத்யன் கூட்டணி ஒரு இடம் பின்தங்கி 24-வது இடம் வகிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்