ஸ்ரீராம் பாலாஜியுடன் இணைந்து ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவேன் - ரோகன் போபண்ணா நம்பிக்கை

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ரோகன் போபண்ணா,ஸ்ரீராம் பாலாஜியுடன் இணைந்து களம் காணுகிறார்.

Update: 2024-07-17 02:01 GMT

சென்னை,

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சீனியர் வீரரான 44 வயது ரோகன் போபண்ணா, தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம் பாலாஜியுடன் இணைந்து களம் காணுகிறார். இந்த போட்டி குறித்து முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரோகன் போபண்ணா நேற்று அளித்த ஒரு பேட்டியில், 'ஒலிம்பிக்கில் நாங்கள் யாருக்கு எதிராக விளையாடினாலும், உண்மையிலேயே ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நான் நம்புகிறேன். நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். எங்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்று நினைக்கவில்லை. ஸ்ரீராம் பாலாஜி ஆக்ரோஷமாக செயல்படக்கூடிய வீரர். பெரிய இணைகளுக்கு சவால் அளிக்க போதுமான திறமை எங்களிடம் இருக்கிறது. களிமண் தரையில் நடைபெறும் போட்டி என்பதால் ஸ்ரீராம் பாலாஜி பொருத்தமான இணையாக இருப்பார் என்று கருதி அவரை தேர்வு செய்தேன். ஒருவேளை இந்த போட்டி கடின தரை அல்லது புல்தரையில் நடப்பதாக இருந்தால் யுகி பாம்ப்ரிக்கு முன்னுரிமை அளித்து இருப்பேன்.

என்னுடன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இணைந்து ஆடும் மேத்யூ எப்டென் போன்று பாலாஜியும் வேகமாக செயல்படும் திறமை படைத்தவர். எப்டெனுக்கு நிறைய அனுபவம் உண்டு. ஆனால் பாலாஜி அவரை போல் அதிகம் விளையாடியது கிடையாது. பாலாஜியின் 'செர்வ்' நிச்சயமாக பெரிய பலமாக இருக்கும். அவர் வலுவாக ஷாட்களை அடிக்கக்கூடியவர். அது இரட்டையர் ஆட்டத்தில் உதவிகரமாக இருக்கும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்