அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் ஜோகோவிச் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் அவர் 24-வது கிராண்ட்ஸ்லாமை வென்று சாதனை படைத்தார்.
நியூயார்க்,
அமெரிக்க ஓபன் டென்னிஸ்
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் கடந்த 2 வாரமாக நடந்து வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), 3-ம் நிலை வீரரான ரஷியாவின் டேனில் மெட்விடேவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஜோகோவிச் எளிதில் கைப்பற்றினாலும் 2-வது செட்டில் மெட்விடேவ் கடும் நெருக்கடி அளித்ததுடன் முன்னிலையும் பெற்றார். 1 மணி 44 நிமிடம் வரை நீடித்த இந்த செட் டைபிரேக்கர் வரை சென்றது. டைபிரேக்கரில் 5-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற மெட்விடேவ் அதன் பிறகு தடுமாற்றத்தை சந்தித்ததால் மேலும் புள்ளிகள் எடுக்க முடியாமல் அந்த செட்டை கோட்டை விட்டார். 3-வது செட்டில் ஜோகோவிச் ஆதிக்கத்தை எதிராளியால் தடுக்க முடியவில்லை.
ஜோகோவிச் சாம்பியன்
முடிவில் 3 மணி 17 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 7-6 (7-5), 6-3 என்ற நேர்செட்டில் மெட்விடேவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார். ஏற்கனவே 2011, 2015, 2018-ம் ஆண்டுகளிலும் இந்த பட்டத்தை வென்று இருந்தார். மேலும் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற அதிக வயது வீரர் என்ற பெருமையையும் 36 வயதான ஜோகோவிச் பெற்றார்.
இந்த ஆண்டில் ஜோகோவிச் கைப்பற்றிய 3-வது கிராண்ட்ஸ்லாம் இதுவாகும். ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபனை வென்று இருந்த அவர் விம்பிள்டன் இறுதிப்போட்டியில் அல்காரஸ்சிடம் (ஸ்பெயின்) தோற்று இருந்தார். ஜோகோவிச் 4-வது முறையாக ஒரு ஆண்டில் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை அறுவடை செய்து சாதித்து இருக்கிறார்.
அதிக கிராண்ட்ஸ்லாம் சாதனை சமன்
ஒட்டுமொத்தத்தில் ஜோகோவிச்சுக்கு இது 24-வது கிராண்ட்ஸ்லாம் மகுடமாக அமைந்தது. அவர் ஆஸ்திரேலிய ஓபனை 10 முறையும், பிரெஞ்ச் ஓபனை 3 முறையும், விம்பிள்டனை 7 முறையும், அமெரிக்க ஓபனை 4 முறையும் வென்று இருக்கிறார். ஏற்கனவே ஆண்கள் ஓற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருக்கும் ஜோஜோவிச், இப்போது வீராங்கனைகளையும் சேர்த்து ஒட்டுமொத்தத்தில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை மார்கரெட் கோர்ட்டின் (24 பட்டம்) சாதனையை சமன் செய்தார். ஜோகோவிச் தனது பட்டங்கள் அனைத்தையும் 'ஓபன் எரா' காலத்தில் (1968-ம் ஆண்டு அமெச்சூர் வீரர்களுடன், தொழில்முறை வீரர்களும் விளையாட அனுமதிக்கப்பட்ட பிறகு) வென்றுள்ளார். மார்கரெட் அமெச்சூர் எரா காலத்தில் 13 பட்டங்களும், ஓபன் எரா காலத்தில் 11 பட்டங்களும் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாகை சூடிய ஜோகோவிச் (11,795 புள்ளி) 2 ஆயிரம் தரவரிசை புள்ளியுடன் ரூ.24¾ கோடியை பரிசாக அள்ளினார். அத்துடன் அவர் நேற்று வெளியிடப்பட்ட புதிய தரவரிசைப்பட்டியலில் மீண்டும் 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்தார். அரைஇறுதியில் தோல்வி கண்ட கார்லஸ் அல்காரஸ் (8,535 புள்ளி) 2-வது இடத்துக்கு சரிந்தார். மெட்விடேவ் (7,280 புள்ளி) 3-வது இடத்தில் நீடிக்கிறார். 2-வது இடம் பெற்ற 27 வயது மெட்விடேவுக்கு ரூ.12½ கோடி பரிசாக வழங்கப்பட்டது.
ஓய்வு பெறும் திட்டமில்லை
வெற்றிக்கு பிறகு ஜோகோவிச் கூறுகையில், 'டென்னிஸ் போட்டியில் வரலாறு படைப்பது என்பது வியப்பான மற்றும் சிறப்பான ஒன்றாகும். சிறப்பு என்பதன் அர்த்தத்தை வார்த்தைகளால் விவரிப்பது கடினம். எனக்கு 7, 8 வயது இருக்கும் போது உலகின் தலைசிறந்த வீரராக உருவெடுத்து விம்பிள்டன் கோப்பையை வெல்ல வேண்டும் என்று கனவு கண்டேன். அதனை மட்டும் அடைய வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அதன் பிறகு புதிய கனவுகளை காண தொடங்கினேன். புதிய குறிக்கோள், இலக்குகளை நிர்ணயித்தேன். 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் குறித்து இங்கே பேசிக்கொண்டு நிற்பேன் என்று கற்பனை செய்து கூட பார்த்ததில்லை.
இந்த விளையாட்டில் இன்னும் என்னால் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால் இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை. நான் 'நம்பர் ஒன்' இடத்தில் இருப்பதால் தொடர்ந்து விளையாடுவதில் கவனம் செலுத்த விரும்புகிறேன்' என்றார்.
அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்கள்
20-க்கு அதிகமான கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர், வீராங்கனை வருமாறு:-
ஜோகோவிச் செர்பியா) 24
மார்கரெட் கோர்ட் (ஆஸ்திரேலியா) 24
செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 23
ரபெல் நடால் (ஸ்பெயின்) 22
ஸ்டெபி கிராப் (ஜெர்மனி) 22
ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ௨௦