டென்னிஸ் தரவரிசை: இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா மீண்டும் 'நம்பர் 1'

டென்னிஸ் தரவரிசையில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் ஜோகோவிச் முதலிடத்தில் தொடருகிறார்.

Update: 2024-04-01 20:50 GMT

image courtesy: AFP

புதுடெல்லி,

அமெரிக்காவில் நடைபெற்று வந்த மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் ஜோகோவிச் (9,725 புள்ளி) முதலிடத்தில் தொடருகிறார். மியாமி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற சின்னர் (8,710 புள்ளி) 2-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும்.

ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் (8,645 புள்ளி) ஒரு இடம் சரிந்து 3-வது இடத்தை பெற்றுள்ளார். மெட்விடேவ் (ரஷியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), ஹோல்கர் ரூனே (டென்மார்க்), கேஸ்பர் ரூட் (நார்வே) முறையே 4 முதல் 8 இடங்களில் மாற்றமின்றி நீடிக்கின்றனர். பல்கேரியா வீரர் டிமிட்ரோவ் 3 இடம் உயர்ந்து 9-வது இடத்தையும், போலந்து வீரர் ஹூபெர்ட் ஹர்காக்ஸ் ஒரு இடம் சறுக்கி 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா 2-வது இடத்தில் இருந்து 'நம்பர் ஒன்' இடத்துக்கு மீண்டும் ஏற்றம் கண்டு இருக்கிறார். அவருடன் இணைந்து ஆடும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டென் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் இகா ஸ்வியாடெக் (போலந்து), சபலென்கா (பெலாரஸ்), கோகோ காப் (அமெரிக்கா), எலினா ரைபகினா (கஜகஸ்தான்), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) ஆகியோர் முறையே முதல் 5 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர். மியாமி ஓபனில் பட்டம் வென்ற அமெரிக்க வீராங்கனை டேனியலி காலின்ஸ் 31 இடங்கள் எகிறி 22-வது இடத்துக்கு வந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்