பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் முகுருஜா அதிர்ச்சி தோல்வி

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டி கால் இறுதியில் முகுருஜா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

Update: 2022-09-23 22:57 GMT

 Image Courtesy: AFP

டோக்கியோ,

பான் பசிபிக் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 4-6, 2-6 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 30-வது இடத்தில் உள்ள லிட்மிலா சாம்சோனோவாவிடம் (ரஷியா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

மற்ற கால்இறுதி ஆட்டங்களில் ரஷியாவின் வெரோனிகா குடெர்மிடோவா 6-7 (4-7), 7-6 (8-6), 6-1 என்ற செட் கணக்கில் பிரேசிலின் பீட்ரிஸ் ஹாடட் மையாவையும், சீன வீராங்கனைகள் கின்வென் செங் 6-4, 7-5 என்ற நேர்செட்டில் கிளைர் லூவையும் (அமெரிக்கா), ஷூவாய் ஜாங் 7-5, 6-2 என்ற நேர்செட்டில் பெட்ரா மார்டிச்சையும் (குரோஷியா) தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தனர்.

இதேபோல் கொரியா ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி சியோலில் நடைபெற்று வருகிறது. இதன் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் லாத்வியா வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ 6-2, 6-1 என்ற நேர்செட்டில் அண்டோரா நாட்டை சேர்ந்த விக்டோரியா ஜிம்மெனிஸ் கேசின்ட்சேவாவை விரட்டியடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

இன்னொரு ஆட்டத்தில் இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு 6-2, 6-2 என்ற நேர்செட்டில் மேக்டா லினெட்டை (போலந்து) ஊதித்தள்ளினார். தாட்ஜனா மரியா (ஜெர்மனி), எகடெரினா அலெக்சாண்ட்ரோவா (ரஷியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்