டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தார் ஜோகோவிச் - சபலென்காவும் முன்னேற்றம்

சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

Update: 2023-01-30 22:31 GMT

image courtesy: #AusOpen twitter

நியூயார்க்,

சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஆஸ்திரேலிய ஓபனை 10-வது முறையாக கைப்பற்றி பிரமிக்க வைத்த நோவக் ஜோகோவிச் (செர்பியா) 4 இடங்கள் முன்னேறி மொத்தம் 7,070 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ஏற்கனவே 374 வாரங்கள் முதலிடத்தில் இருந்துள்ள ஜோகோவிச் மறுபடியும் 'நம்பர் ஒன்' அரியணையில் ஏறியுள்ளார்.

ஒட்டுமொத்த டென்னிசில் ஜெர்மனி முன்னாள் வீராங்கனை ஸ்டெபி கிராப் 377 வாரங்கள் முதலிடத்தில் இருந்ததே அதிகபட்சமாகும். பிப்ரவரி 27-ந்தேதி வரை 35 வயதான ஜோகோவிச் முதலிடத்தில் இருக்கும் பட்சத்தில் ஸ்டெபி கிராப்பின் சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைப்பார். இதுவரை முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 2-வது இடத்துக்கு (6,730 புள்ளி) தள்ளப்பட்டார். மற்றொரு ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 2-ல் இருந்து 6-வது இடத்துக்கு சறுக்கினார். ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச்சிடம் தோல்வி அடைந்த கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் ஒரு இடம் உயர்ந்து 3-வது இடத்தை பெற்றுள்ளார்.

பெண்கள் தரவரிசையில் போலந்தின் இகா ஸ்வியாடெக் தொடர்ந்து 44-வது வாரமாக 'நம்பர் ஒன்' இடத்தில் தொடருகிறார். ஆஸ்திரேலிய ஓபனை வென்று தனது கிராண்ட்ஸ்லாம் கனவை நனவாக்கிய பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 3 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை எட்டியுள்ளார். இதன் இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்ட கஜகஸ்தானின் எலினா ரைபகினா 15 இடங்கள் எகிறி முதல்முறையாக டாப்-10 இடத்திற்குள் நுழைந்து 10-வது இடத்தை பிடித்துள்ளார். துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் 2-ல் இருந்து 3-வது இடத்துக்கு இறங்கினார்.

இரட்டையர் தரவரிசையில் செக்குடியரசின் கேத்ரினா சினியகோவா முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஒரு இடம் ஏற்றம் கண்டு 28-வது இடம் வகிக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்