மராட்டிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம் - ராம்குமார் பிரதான சுற்றுக்கு தகுதி
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனேயில் இன்று தொடங்குகிறது.
புனே,
5-வது மராட்டிய ஓபன் சர்வதேச ஆண்கள் டென்னிஸ் போட்டி புனேயில் இன்று தொடங்கி 7-ந்தேதி வரை நடக்கிறது. தெற்காசியாவில் நடக்கும் ஒரே ஏ.டி.பி. தொடரான இதில் அமெரிக்க ஓபனை வென்றவரும், உலக தரவரிசையில் 17-வது இடம் வகிப்பவருமான மரின் சிலிச் (குரோஷியா), எமில் ரூசுவோரி (பின்லாந்து), போடிக் வான்டி ஜான்ட்ஸ்கல்ப் (நெதர்லாந்து), செபாஸ்டியன் பேஸ் (அர்ஜென்டினா), அலெக்ஸ் மால்கன் (சுலோவக்கியா), அஸ்லான் கரட்சேவ் (ரஷியா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள். நடப்பு சாம்பியன் ஜோவ் சோசா (போர்ச்சுகல்) இந்த முறை வரவில்லை.
இந்திய தரப்பில் ஒற்றையர் பிரிவில் முகுந்த் சசிகுமார், 15 வயதான மனாஸ் தாமே, சுமித் நாகல் ஆகியோர் 'வைல்டு கார்டு' சலுகை மூலம் பிரதான சுற்றில் விளையாட உள்ளனர். இவர்களுடன் மற்றொரு இந்திய வீரரும், சென்னையைச் சேர்ந்தவருமான ராம்குமாரும் பிரதான சுற்றில் ஆட இருக்கிறார்.
அவர் நேற்று தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் 6-3, 7-5 என்ற நேர் செட்டில் பெலுக்சியை (இத்தாலி) தோற்கடித்து பிரதான சுற்றை எட்டினார். ராம்குமார் தனது முதல் சுற்றில் பெட்ரோ மார்ட்டினசுடன் (ஸ்பெயின்) மோத உள்ளார். அதே சமயம் இன்னொரு இந்திய வீரர் யுகி பாம்ப்ரி தகுதி சுற்றில் 1-6, 4-6 என்ற நேர் செட்டில் எலியாஸ் எய்மெரிடம் (சுவீடன்) தோற்று வெளியேறினார்.
ஒற்றையரில் பட்டம் வெல்லும் வாய்ப்பில் உள்ள மரின் சிலிச் நேரடியாக 2-வது சுற்றில் கால்பதிக்கிறார். அவர் தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்பல்லேஸ் பானா அல்லது ஜபட்டா மிராலெஸ் ஆகியோரில் ஒருவருடன் மோதுகிறார்.
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஜான்ட்ஸ்கல்ப் (நெதர்லாந்து), ராம்குமார் (இந்தியா)- மிக்யூல் ஏஞ்சல் ரியேஸ் வரேலா (மெக்சிகோ), ராஜீவ் ராம் (அமெரிக்கா)- ஜோ சலிஸ்பரி (இங்கிலாந்து), இந்தியாவின் புராவ் ராஜா- திவிஜ் சரண் ஆகிய ஜோடிகளில் ஒன்று பட்டம் வெல்ல வாய்ப்புள்ளது.
இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.6¼ கோடியாகும். இதில் ஒற்றையரில் சாம்பியன் பட்டம் வெல்வோருக்கு 250 தரவரிசை புள்ளிகளுடன் ரூ.88 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் வீரருக்கு ரூ.47 லட்சம் கிடைக்கும். இரட்டையர் பிரிவில் வாகை சூடும் ஜோடிக்கு ரூ.28 லட்சம் அளிக்கப்படும்.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ்18 மற்றும் ஜியோ சினிமா சேனல்கள் ஒளிபரப்பு செய்கின்றன.