இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: மெட்விடேவ், சபலென்கா கால்இறுதிக்கு தகுதி
இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் டேனில் மெட்விடேவ், சபலென்கா கால்இறுதிக்கு முன்னேறினர்.
இண்டியன்வெல்ஸ்,
இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், 14-வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) சந்தித்தார்.
இந்த ஆட்டத்தில் 2-வது செட்டின் போது பந்தை எதிர்கொள்ள முயற்சிக்கையில் தரையில் விழுந்து வலது கணுக்காலில் காயம் அடைந்த மெட்விடேவ் களத்தில் சிகிச்சை பெற்றதுடன் காயமடைந்த இடத்தில் கட்டுபோட்டபடி ஆடி சரிவில் இருந்து மீண்டு வந்து வெற்றியை தனதாக்கினார். 3 மணி 17 நிமிடம் நீடித்த ஆட்டத்தில் மெட்விடேவ் 6-7 (5-7), 7-6 (7-5), 7-5 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக் சாம்பியன் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி முதல்முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். சர்வதேச போட்டியில் அவர் தொடர்ச்சியாக பெற்ற 17-வது வெற்றி இதுவாகும்.
'கணுக்காலில் வலி அதிகமாக இருப்பதால் ஸ்கேன் செய்து பார்த்த பிறகு தொடர்ந்து விளையாட முடியுமா? என்பது குறித்து முடிவு செய்வேன்' என்று மெட்விடேவ் தெரிவித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), இங்கிலாந்தின் ஜாக் டிராபெரை எதிர்கொண்டார். இதில் அல்காரஸ் 6-2, 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக ஜாக் டிராபெர் போட்டியில் இருந்து விலகினார். இதனால் அல்காரஸ் வெற்றி பெற்று தொடர்ச்சியாக 2-வது முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார்.
இன்னொரு ஆட்டத்தில் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் 2-6, 4-6 என்ற நேர்செட்டில் கேமரூன் நோரியிடம் (இங்கிலாந்து) தோல்வி அடைந்தார்.
பெண்கள் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-3, 6-1 என்ற நேர்செட்டில் 2021-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான எம்மாரடுகானுவை (இங்கிலாந்து) விரட்டியடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
இதே போல் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் பார்போரா கிரெஜ்சிகோவாவை (செக்குடியரசு) வெளியேற்றி கால்இறுதியை எட்டினார். பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), மரியா சக்காரி (கிரீஸ்), கரோலினா முச்சோவா (செக்குடியரசு), எலினா ரைபகினா (கஜகஸ்தான்), கோகோ காப் (அமெரிக்கா) உள்ளிட்டோரும் 3-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.