பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஸ்வியாடெக், மெட்விடேவ் வெற்றி

பிரெஞ்சு ஓபன் டென்னிசில் ஸ்வியாடெக், மெட்விடேவ் 2-வது சுற்றில் எளிதில் வெற்றி பெற்றனர்.

Update: 2022-05-26 22:38 GMT

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரர் டேனில் மெட்விடேவ் (ரஷியா) 6-3, 6-4, 6-3 என்ற நேர் செட்டில் லாஸ்லோ டேரை (செர்பியா) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் 13 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-1, 6-4 என்ற நேர் செட்டில் கோரென்டின் மோடெட்டை (பிரான்ஸ்) வீழ்த்தினார்.

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் நடாலின் 300-வது வெற்றி இதுவாகும். சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (369 வெற்றி), செர்பியாவின் ஜோகோவிச் (324 வெற்றி) ஆகியோருக்கு பிறகு இந்த மைல்கல்லை எட்டிய 3-வது வீரர் நடால் ஆவார். மரின் சிலிச் (குரோஷியா), டேவிட் கோபின் (பெல்ஜியம்), ஹர்காக்ஸ் (போலந்து), கேஸ்பர் ரூட் (நார்வே) உள்ளிட்டோரும் 3-வது சுற்றை எட்டினர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- நெதர்லாந்தின் மேட்வி மிட்டெல்கூப் கூட்டணி 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ஆந்த்ரே கோலுபெவ் (கஜகஸ்தான்)- பேப்ரிஸ் மார்ட்டின் (பிரான்ஸ்) இணையை சாய்த்து 3-வது சுற்றுக்கு முன்னேறியது. இந்தியாவின் ராம்குமார்- அமெரிக்காவின் ஹன்டர் ரீஸ் ஜோடி 3-6, 2-6 என்ற நேர் செட்டில் ஸ்கப்ஸ்கி (இங்கிலாந்து)- வெஸ்லி கூல்ஹாப் (நெதர்லாந்து) ஜோடியிடம் பணிந்தது.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பட்டம் வெல்லும் வாய்ப்பில் உள்ள 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-0, 6-2 என்ற நேர் செட்டில் அலிசன் ரிஸ்கேவை (அமெரிக்கா) வெறும் 61 நிமிடங்களில் துவம்சம் செய்தார். ஸ்வியாடெக் தொடர்ச்சியாக சுவைத்த 30-வது வெற்றி இதுவாகும். பாலா படோசா (ஸ்பெயின்), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) உள்ளிட்டோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.

அதே சமயம் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 2-6, 2-6 என்ற நேர் செட்டில் 227-ம் நிலை வீராங்கனை லியோலியா ஜீன்ஜீனிடம் (பிரான்ஸ்) அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். தரவரிசையில் முதல் 10 இடங்களில் வகிக்கும் வீராங்கனைகளில் 6 பேர் 2-வது சுற்றுடன் நடையை கட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் 2018-ம் ஆண்டு சாம்பியனான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-2, 2-6, 1-6 என்ற செட் கணக்கில் கின்வென் ஜெங்கிடம் (சீனா)தோற்று வெளியேறினார்.

Tags:    

மேலும் செய்திகள்