பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பாரீஸ்,
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரையில் அரங்கேறும் இந்த போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ்சை சந்தித்தார்.
36 வயதான ஜோகோவிச் முதல் செட்டை எளிதாக தனதாக்கினார். காயத்தில் இருந்து மீண்டு வந்து இருக்கும் 20 வயது இளம் வீரரான அல்காரஸ் 2-வது செட்டை தன்வசப்படுத்தினார். இருப்பினும் அவரால் அந்த உத்வேகத்தை தொடர முடியவில்லை. தனது அனுபவத்தின் மூலம் மீண்டும் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-3, 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் அல்காரஸ்சை வெளியேற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 3 மணி 23 நிமிடம் நீடித்தது. பிரெஞ்சு ஓபனை 2 முறை வென்று இருக்கும் ஜோகோவிச் 7-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-2, 7-6 (9-7) என்ற நேர்செட்டில் தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள ஹாடட் மையாவை (பிரேசில்) வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2 மணி 9 நிமிடம் நடந்தது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச், கேஸ்பர் ரூட் (நார்வே) அல்லது அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோரில் ஒருவரை எதிர்கொள்வார். இறுதிப்போட்டியில் ஜோஜோவிச் வெற்றி பெற்றால் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை படைப்பதுடன் நம்பர் ஒன் இடத்தை அல்காரஸ்சிடம் இருந்து தட்டுப்பறிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இகா ஸ்வியாடெக் (போலந்து), தரவரிசையில் 43-வது இடம் வகிக்கும் செக்குடியரசு வீராங்கனை கரோலினா முச்சோவாவுடன் மோதுகிறார். முச்சோவா முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதி சுற்றுக்குள் நுழைந்து இருக்கிறார். ஸ்வியாடெக் 4-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை குறிவைத்து களம் இறங்குகிறார். இதற்கு முன்பு இருவரும் ஒரே ஒரு முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றனர். 2019-ம் ஆண்டு நடந்த பராகுவே ஓபன் களிமண் தரை போட்டியின் முதல் சுற்றில் முச்சோவா, ஸ்வியாடெக்கை வீழ்த்தி இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.