பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 தொழிலாளர்கள் பலி

Update: 2023-04-16 18:45 GMT

நாமக்கல்:

பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி காகித ஆலை தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

தொழிலாளர்கள்

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் கிரிநாத் (வயது 21). சிவகங்கையை சேர்ந்தவர் ஹரிகரன் (21). இவர்கள் 2 பேரும் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்று பகுதியில் உள்ள காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

நேற்று காலை அவர்கள் 2 பேரும் பள்ளிபாளையம் பாப்பம்பாளையம் பகுதியில் முனியப்பன் கோவில் பின்புறம் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஹரிகரன் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதால், அவர் தண்ணீரில் மூழ்கினார்.

தண்ணீரில் மூழ்கி பலி

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிரிநாத், அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது திடீரென அவரும் தண்ணீரில் மூழ்கினார். அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர் இதுகுறித்து பள்ளிபாளையம் போலீஸ் நிலையம் மற்றும் வெப்படை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். மேலும் மீனவர்கள் உதவியுடன், தீயணைப்பு வீரர்கள் பரிசலில் சென்று 2 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கிரிநாத், ஹரிகரன் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது. இதையடுத்து 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர்கள் 2 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர்.

சோகம்

போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.காவிரி ஆற்றில் மூழ்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்