டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இன்று தொடக்கம்

டேவிஸ் கோப்பை போட்டி வரலாற்றில் இந்திய அணி பாகிஸ்தானிடம் ஒருபோதும் தோற்றதில்லை.

Update: 2024-02-03 01:21 GMT

Image Courtesy: @aniljaindr / @AITA__Tennis

இஸ்லாமாபாத்,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப்1 பிளே-ஆப் சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

60 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் சென்றுள்ள இந்திய டென்னிஸ் அணிக்கு மிகமுக்கிய பிரமுகர்கள்போல் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை நேரில் காண மொத்தம் 500 பேருக்குதான் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அனுமதி அளித்துள்ளது.

தொடக்க நாளில் நடக்கும் ஒற்றையர் ஆட்டத்தில் ராம்குமார் (இந்தியா)-அய்சம் உல்-ஹக் குரேஷி (பாகிஸ்தான்) ஆகியோர் மோதுகிறார்கள். இந்த போட்டி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து நடைபெறும் மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் அகீல் கான் (பாகிஸ்தான்) - ஸ்ரீராம் பாலாஜி (இந்தியா) மோதுகின்றனர்.

2-வது நாளில் நடைபெறும் இரட்டையர் ஆட்டத்தில் பர்கத்துல்லா-முஜாமில் முர்தசா (பாகிஸ்தான்) - யுகி பாம்ப்ரி-சகெத் மைனெனி (இந்தியா) இணையும், மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் ராம்குமார் - அகீல் கான், அய்சம் உல்-ஹக் குரேஷி - ஸ்ரீராம் பாலாஜி ஆகியோரும் மோதுகிறார்கள்.

டேவிஸ் கோப்பை போட்டி வரலாற்றில் இந்திய அணி பாகிஸ்தானிடம் ஒருபோதும் தோற்றதில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக 7 முறை மோதியுள்ள இந்திய அணி எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கிறது. தனது ஆதிக்கத்தை இந்த போட்டியிலும் இந்திய அணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் குரூப்-1ல் நீடிக்கும். மாறாக தோற்றால் குரூப்2-க்கு தரம் இறங்கும் நிலை ஏற்படும்.

Tags:    

மேலும் செய்திகள்