டேவிஸ் கோப்பை டென்னிஸ்: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முன்னிலை
டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப்1 பிளே-ஆப் சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வருகிறது.;
இஸ்லாமாபாத்,
டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப்1 பிளே-ஆப் சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வருகிறது.
60 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் சென்றுள்ள இந்திய டென்னிஸ் அணிக்கு மிகமுக்கிய பிரமுகர்கள்போல் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை நேரில் காண மொத்தம் 500 பேருக்குதான் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அனுமதி அளித்துள்ளது.
தொடக்க நாளான நேற்று 2 ஒற்றையர் ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், பாகிஸ்தான் வீரர் ஐசம் அல் ஹக் குரேஷியுடன் மோதினார். இதில் ராம்குமார் ராமநாதன் 6-7, 7-6, 6-0 என்ற செட் கணக்கில் ஐசம் அல் ஹக் குரேஷியை வீழ்த்தினார்.
மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் என்.ஸ்ரீராம் பாலாஜி 7-5, 6-3 என்ற செட் கணக்கில் பாகிஸ்தானின் அகீல் கானைத் தோற்கடித்தார். இதனால் குரூப் சுற்றில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்தில், இந்திய வீரர் யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி ஜோடி, பாகிஸ்தானின் முசாமில் முர்டாஸா, பர்கத் உல்லா ஜோடியை எதிர்த்து விளையாடுகிறது.