சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் எலினா ரைபகினா, இகா ஸ்வியாடெக் வெற்றி
அரினா சபலென்கா 7-5, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அன் லியை போராடி வெளியேற்றினார்.
சின்சினாட்டி,
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் விம்பிள்டன் சாம்பியனும், தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவருமான எலினா ரைபகினா (கஜகஸ்தான்) சரிவில் இருந்து மீண்டு வந்து 6-7 (6-8), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் முன்னாள் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனும், 19-ம் நிலை வீராங்கனையுமான ஜெலினா ஆஸ்டாபென்கோவை (லாத்வியா) வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 2 மணி 17 நிமிடம் நீடித்தது.
'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) தன்னை எதிர்த்த அமெரிக்காவின் டேனிலி காலின்சை 6-1, 6-0 என்ற நேர்செட்டில் வெறும் 59 நிமிடங்களில் விரட்டியடித்தார். ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான அரினா சபலென்கா (பெலாரஸ்) 7-5, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அன் லியை போராடி வெளியேற்றினார்.
அதே சமயம் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-1, 2-6, 1-6 என்ற செட் கணக்கில் சீனாவின் கின்வென் செங்கிடம் வீழ்ந்து நடையை கட்டினார்.
மற்ற ஆட்டங்களில் கோகோ காப் (அமெரிக்கா), டோனா வெகிச் (குரோஷியா), கரோலினா முச்சோவா (செக்குடியரசு), மரியா சக்காரி (கிரீஸ்), வோன்ட்ரோசோவா (செக்குடியரசு), டாரியா கசட்கினா (ரஷியா), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) ஆகியோரும் தங்களது 2-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.