சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய வீராங்கனை கர்மன் தண்டி வெளியேற்றம்

சென்னை ஓபன் டென்னிசில் இந்திய வீராங்கனை கர்மன் தண்டி 2-வது சுற்றுடன் வெளியேறினார்.

Update: 2022-09-14 23:05 GMT

சென்னை,

சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 359-வது இடம் வகிக்கும் இந்தியாவின் கர்மன் கவுர் தண்டி, அனுபவம் வாய்ந்த யூஜெனி புசார்ட்டை (கனடா) எதிர்கொண்டார்.

முதல் செட்டை எளிதில் இழந்த கர்மன் தண்டி 2-வது செட்டில் எதிராளிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். 5-2 என்ற முன்னிலையுடன் அந்த செட்டை வெல்லும் நிலைக்கு நகர்ந்தார். ஆனால் அதே உத்வேகத்தை அவரால் தொடர முடியவில்லை. சரிவில் இருந்து மீண்ட புசார்ட் 6-6 என்று சமனுக்கு கொண்டு வந்தார். இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட டைபிரேக்கரில் புசார்ட் வெற்றிக்கனியை பறித்தார்.

2 மணி 13 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் புசார்ட் 6-2, 7-6 (7-2) என்ற நேர் செட்டில் தண்டியை தோற்கடித்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். கர்மன் தண்டி, புசார்ட்டை விட அதிக தவறுகளை இழைத்தார். பந்தை வலுவாக வெளியே விரட்டுவது, வலை மீது அடிப்பது போன்ற எதிராளிகளுக்கு புள்ளிகளை தாரை வார்க்கும் தவறுகளை மட்டும் 26 முறை செய்தது பின்னடைவாக அமைந்தது.

அத்துடன் சீதோஷ்ண நிலையும் அவரை சோர்வடையச் செய்தது. புழுக்கத்தால் வியர்த்து கொட்டி நனைந்து போனார். கர்மன் தண்டியின் தோல்வியின் மூலம் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னாவும் தோற்று வெளியேறி விட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்