சென்னை ஓபன் டென்னிஸ்: வெற்றி பெற்ற வீராங்கனைக்கு கேடயம் வழங்கி கெளரவித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை லிண்டாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி கெளரவித்தார்.
சென்னை,
சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.) ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஒற்றையர் இறுதிப்போட்டியில் 17 வயதான செக்குடியரசு வீராங்கனை லின்டா புருவிர்தோவா, போலந்தின் மேக்டா லினெட்டுடன் பலப்பரீட்சை நடத்தினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மேக்டா லினெட்டுவை 6-4, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி லின்டா புருவிர்தோவா சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை லிண்டாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி கெளரவித்தார்.
* ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற லிண்டாவுக்கு கேடயம், ரூ.26.44 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
* இரண்டாம் இடம் பிடித்த போலந்து வீராங்கனை மேக்டா லினெட்-க்கு கேடயம், ரூ.15.73 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
முன்னதாக சர்வதேச மகளிர் டென்னிஸ் சங்க போட்டியின் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், போலாந்து நாட்டு வீராங்கனை மேக்டா லினெட் மற்றும் செக் குடியரசு வீராங்கனை லிண்டா ப்ரூவிர்டோவா ஆகியோருக்கிடையே நடைபெற்ற போட்டியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.