சென்னை ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் லின்டா, லினெட்

சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செக்குடியரசு வீராங்கனை லின்டா, போலந்து வீராங்கனை லினெட் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

Update: 2022-09-17 20:17 GMT

லின்டா அசத்தல்

சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்.டி.ஏ.டி.) ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 130-வது இடத்தில் இருக்கும் செக்குடியரசு வீராங்கனை லின்டா புருவிர்தோவா, 298-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவின் நடியா போடோரோஸ்கோவை சந்தித்தார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை லின்டா புருவிர்தோவா போராடி இழந்தார். அதன் பிறகு ஆக்ரோஷமாக மட்டையை சுழற்றிய அவர் சரிவில் இருந்து அபாரமாக மீண்டார். 2 மணி 54 நிமிடம் பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் 17 வயதான லின்டா புருவிர்தோவா 5-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் 25 வயது நடியா போடோரோஸ்கோவை விரட்டியடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இங்கிலாந்து வீராங்கனை பாதியில் விலகல்

மற்றொரு அரைஇறுதியில் தரவரிசையில் 64-வது இடத்தில் இருக்கும் போலந்து வீராங்கனை மேக்டா லினெட், 174-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து வீராங்கனை கேட்டி ஸ்வானுடன் மோதினார்.

இதில் முதல் செட்டில் மேக்டா லினெட் 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது உடல் நலம் பாதிப்பு காரணமாக கேட்டி ஸ்வான் போட்டியில் இருந்து பாதியில் விலகினார். இதனால் மேக்டா லினெட் இறுதிப்போட்டியை எட்டினார்.

முன்னதாக நடந்த இரட்டையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் கேப்ரியல்லா டாப்ரோஸ்கி (கனடா)-லுசா ஸ்டெபானி (பிரேசில்) இணை 6-3, 6-3 என்ற நேர்செட்டில் பீங்க்டார்ன் லீப்பீச் (தாய்லாந்து)-மாயுகா உஜ்ஜிமா (ஜப்பான்) ஜோடியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இன்று இறுதிப்போட்டி

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறும் இரட்டையர் இறுதிப்போட்டியில் கேப்ரியல்லா டாப்ரோஸ்கி (கனடா)-லுசா ஸ்டெபானி (பிரேசில்) கூட்டணி, அன்னா லின்கோவா (ரஷியா)-நடிலா ஜலாமிட்ஸ் (ஜார்ஜியா) இணையை எதிர்கொள்கிறது.

இதனை தொடர்ந்து நடைபெறும் ஒற்றையர் இறுதிப்போட்டியில் செக்குடியரசு வீராங்கனை லின்டா புருவிர்தோவா, போலந்தின் மேக்டா லினெட்டுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்