பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு சர்வதேச டென்னிஸ் போட்டி: அரியானா வீரர் திக்விஜய் பிரதாப் சிங் 'சாம்பியன்'

சென்னையில் நடந்த பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு சர்வதேச டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அரியானா வீரர் திக்விஜய் பிரதாப் சிங்குக்கு, இரா.கண்ணன் ஆதித்தன் பரிசு வழங்கினார்.

Update: 2023-04-11 21:04 GMT

சென்னை,

சர்வதேச டென்னிஸ் போட்டி

'மாலை முரசு' அதிபர் மறைந்த பா.ராமச்சந்திர ஆதித்தனார், அடையாறு காந்தி நகர் கிளப்பின் தலைவராக 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தார். அவரது சேவையை போற்றும் வகையில் பா.ராமச்சந்திர ஆதித்தனார் நினைவுக் கோப்பைக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை அடையாறில் உள்ள காந்திநகர் கிளப் மைதானத்தில் 8 நாட்கள் நடந்தது.

ஆண்கள் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் நடந்த இந்த போட்டியில் வியட்நாம், பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், உக்ரைன், அமெரிக்கா, தென்கொரியா, சீனதைபே ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த வீரர்களுடன் இந்தியாவின் முன்னணி வீரர்களும் களம் கண்டனர்.

அரியானா வீரர் 'சாம்பியன்'

இதன் ஓற்றையர் பிரிவின் இறுதிஆட்டத்தில் அரியானாவை சேர்ந்த திக்விஜய் பிரதாப் சிங்- சித்தார்த் ராவத் (டெல்லி) ஆகியோர் மோதினர்.

விறுவிறுப்பான இந்த மோதலில் திக்விஜய் பிரதாப் சிங் 6-4, 7-6 (7-3) என்ற நேர்செட்டில் சித்தார்த் ராவத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு ரூ.1 லட்சத்து 77 ஆயிரமும், 2-வது இடம் பெற்ற சித்தார்த் ராவத்துக்கு ரூ.1 லட்சத்து 4 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.

இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் விஷ்ணு வர்தன்-நிதின் குமார் சின்ஹா ஜோடி 6-1, 6-7 (2-7), 10-7 என்ற செட் கணக்கில் சக நாட்டவர்களான சாய் கார்த்திக் ரெட்டி-தீர்த்த சஷாங் மேச்சர்லா இணையை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை தனதாக்கியது. வாகை சூடிய விஷ்ணு வர்தன்-நிதின் குமார் ஜோடி ரூ.76 ஆயிரமும், 2-வது இடம் பிடித்த சாய் கார்த்திக் ரெட்டி -மேச்சர்லா இணை ரூ.44 ஆயிரமும் பரிசாக பெற்றது.

இரா.கண்ணன் ஆதித்தன்

பரிசளிப்பு விழாவில் மாலை முரசு நாளிதழ்-தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன், தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் துணைத் தலைவரும், சன்மார் குழும துணைத்தலைவருமான விஜய் சங்கர் ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்கள். காந்திநகர் கிளப் செயலாளர் மகேஷ் ஷான்பாக், உறுப்பினர்கள் நாராயணன், சுதர்ஷன், தமிழ்நாடு டென்னிஸ் சங்க உறுப்பினர்கள் ஹிதேன் தோஷி, வெங்கடேஷ் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.  

Tags:    

மேலும் செய்திகள்