முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்..!

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் இன்று தொடங்குகிறது.

Update: 2023-08-27 23:02 GMT

நியூயார்க்,

ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 வகையான 'கிராண்ட்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 143-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது. கடின தரையில் நடக்கும் இந்த போட்டியையொட்டி முன்னணி வீரர், வீராங்கனைகள் நியூயார்க்கில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் 'நம்பர் ஒன்' வீரரும், நடப்பு சாம்பியனுமான கார்லஸ் அல்காரசுக்கும் (ஸ்பெயின்), 2-ம் நிலை வீரர் நோவக் ஜோகோவிச்சுக்கும் (செர்பியா) இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் கடந்த முறை அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட ஜோகோவிச் 2 ஆண்டுக்கு பிறகு இந்த போட்டியில் களம் காணுகிறார். 23 கிராண்ட்ஸ்லாம் வென்ற அனுபவசாலியான ஜோகோவிச் முதல் சுற்றில் 85-ம் நிலை வீரர் அலெக்சாண்ட்ரே முல்லரை (பிரான்ஸ்) சந்திக்கிறார். முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி பெற்றாலே தரவரிசையில் மீண்டும் 'நம்பர் ஒன்' அரியணையில் ஏறி விடுவார். 3 முறை சாம்பியனான ஜோகோவிச் கால்இறுதியில் 7-ம் நிலை வீரர் சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. கணிப்புபடி எல்லாம் சரியாக நகர்ந்தால் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சும், அல்காரசும் நேருக்கு நேர் மல்லுக்கட்டலாம்.

கடந்த மாதம் விம்பிள்டன் இறுதிப்போட்டியில் அல்காரசிடம் போராடி வீழ்ந்த ஜோகோவிச் அதற்கு சின்சினாட்டி ஓபன் இறுதி சுற்றில் பழிதீர்த்தது நினைவிருக்கலாம். 36 வயதான ஜோகோவிச் அமெரிக்க ஓபனில் மகுடம் சூடும் பட்சத்தில், ஒட்டுமொத்தத்தில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்க்கரேட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்வார்.

20 வயதான அல்காரசுக்கு இந்த முறை போட்டி அட்டவணை கடினமாக அமைந்துள்ளது. முதல் சுற்றில் ஜெர்மனியின் டொமினிக் கோப்பெருடன் மோதும் அவர் அனேகமாக கால்இறுதியில் 6-ம் நிலை யானிக் சின்னெரையும் (இத்தாலி), இந்த தடையை கடந்தால் அரைஇறுதியில் 3-ம் நிலை வீரர் டேனில் மெட்விடேவையும் (ரஷியா) சந்திக்க வேண்டியது வரலாம். ஹோல்ஜர் ருனே (டென்மார்க்), டெய்லர் பிரைட்ஸ் (அமெரிக்கா), ஹர்காக்ஸ் (போலந்து), கேஸ்பர் ரூட் (நார்வே), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) உள்ளிட்டோரும் வரிந்து கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் டாப்-6 இடத்தில் உள்ள இகா ஸ்வியாடெக் (போலந்து), அரினா சபலென்கா (பெலாரஸ்), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), எலினா ரைபகினா (கஜகஸ்தான்), ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா), கோகோ காப் (அமெரிக்கா) ஆகியோரில் ஒருவர் பட்டம் வெல்வதற்கே பிரகாசமான வாய்ப்புள்ளது. இதே போல் சமீபத்தில் விம்பிள்டன் கோப்பையை கைப்பற்றி கவனத்தை ஈர்த்த வோன்ட்ரோசோவா, பெட்ரா கிவிடோவா, கரோலினா முச்சோவா (3 பேரும் செக்குடியரசு), கசட்கினா (ரஷியா), அஸரென்கா (பெலாரஸ்), மரியா சக்காரி (கிரீஸ்), கரோலின் கார்சியா (பிரான்ஸ்) உள்ளிட்டோர் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நடப்பு சாம்பியனான ஸ்வியாடெக் தனது முதல் சுற்றில் சுவீடனின் ரெபக்கோ பீட்டர்சனுடன் களம் இறங்குகிறார். சபலென்கா முதல் ரவுண்டில் ஜனிஸ்காவுடன் (பெல்ஜியம்) மோதுகிறார். அண்மையில் சின்சினாட்டி ஓபனை வென்றதால் கூடுதல் உற்சாகத்துடன் கால்பதிக்கும் உள்ளூர் புயல் கோகோ காப் தனது சவாலை லாரா சீஜ்மன்டுடன் (பெல்ஜியம்) தொடங்குகிறார். கோகோ காப் கால்இறுதியில் ஸ்வியாடெக்குடன் மோத வாய்ப்புள்ளது.

இந்தியர்களை பொறுத்தவரை ஒற்றையர் பிரிவில் யாரும் தகுதி பெறவில்லை. ஆண்கள் இரட்டையரில் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டெனுடன் ஜோடி சேர்ந்து களம் இறங்குகிறார். யுகி பாம்ப்ரி, மார்செலோ டெமோலினருடனும் (பிரேசில்), சகெத் மைனெனி, அஸ்லான் கரட்செவுடனும் (ரஷியா), ஜீவன் நெடுஞ்செழியன், ஜான் பேட்ரிக் சுமித்துடனும் (ஆஸ்திரேலியா) கைகோர்த்துள்ளனர்.

போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.536 கோடியாகும். கடந்த ஆண்டை விட இது 8 சதவீதம் அதிகமாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு ரூ.24¾ கோடி பரிசாக கிடைக்கும். அத்துடன் 2 ஆயிரம் தரவரிசை புள்ளியையும் பெறுவார்கள். 2-வது இடம் பிடிக்கும், வீரர், வீராங்கனைக்கு ரூ.12½ கோடி பரிசாக வழங்கப்படும். மேலும் முதல் சுற்றில் தோற்றால் கூட அந்த வீரர், வீராங்கனை ரூ.67 லட்சம் தொகையுடன் தான் வெளியேறுவார்கள். இரட்டையர் பிரிவில் கோப்பையை வெல்லும் ஜோடிக்கு ரூ.5¾ கோடி கிட்டும்.

இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டென்னிஸ் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென்2, சோனி ஸ்போர்ட்ஸ் டென்5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. முதல் நாளில் ஜோகோவிச், ஸ்வியாடெக், கோகோ கோப், சிட்சிபாஸ், ரைபகினா உள்ளிட்ட நட்சத்திரங்கள் விளையாடுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்