பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் முர்ரே, ஸ்விடோலினா

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் ஒலிம்பிக் சாம்பியன் முர்ரே, ஸ்விடோலினா 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.;

Update:2017-06-02 03:30 IST
பாரீஸ்

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 6-4, 7-6 (7-5), 7-5 என்ற நேர் செட்டில் அலெக்சாண்டர் டோல்கோபோலாவை (உக்ரைன்) வீழ்த்தினார். 16 ‘ஏஸ் சர்வீஸ்’ வீசி அசத்திய வாவ்ரிங்கா பிரெஞ்ச் ஓபனில் 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைப்பது இது 10-வது முறையாகும். வாவ்ரிங்கா அடுத்து இத்தாலியின் பாபியோ போக்னினியை எதிர்கொள்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 6-7 (3-7), 6-2, 6-2, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் சுலோவக்கியாவின் மார்ட்டின் கிளைஜானை சாய்த்தார். இந்த வெற்றியை பெற முர்ரே 3 மணி 34 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது.

அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ 2-வது சுற்றில் ஸ்பெயினின் நிகோலஸ் அல்மாக்ரோவுடன் மோதினார். இதில் இருவரும் தலா ஒரு செட்டை வென்ற நிலையில் கால்முட்டி காயத்தால் அல்மாக்ரோ கண்ணீருடன் விலக, டெல் போட்ரோ வெற்றி பெற்றார். 5 ஆண்டுகளுக்கு பிறகு பிரெஞ்ச் ஓபனில் ஆடும் டெல் போட்ரோ அடுத்து ஆன்டி முர்ரேவுடன் கோதாவில் இறங்குகிறார்.

ஸ்விடோலினா வெற்றி

ரஷிய வீரர் காரென் காச்சனோவ் 7-6, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் முன்னணி வீரர் தாமஸ் பெர்டிச்சுக்கு அதிர்ச்சி அளித்தார். மரின் சிலிச் (குரோஷியா), நிஷிகோரி (ஜப்பான்), பெலிசியானோ லோப்ஸ்(ஸ்பெயின்), ஜான் இஸ்னர் (அமெரிக்கா) ஆகியோரும் 3-வது சுற்றை உறுதி செய்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள நட்சத்திரம் என்று வர்ணிக்கப்படும் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பல்கேரியாவின் பைரோன்கோவாவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். செவஸ்தோவா (லாத்வியா) தன்னை எதிர்த்த கனடா புயல் பவுச்சார்ட்டை 6-3, 6-0 என்ற நேர் செட்டில் விரட்டியடித்தார். அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து), அலிஸி கார்னெட் (பிரான்ஸ்), எலினா வெஸ்னினா (ரஷியா) உள்ளிட்டோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

மேலும் செய்திகள்