ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஆன்டி முர்ரே, கெர்பர் அதிர்ச்சி தோல்வி சானியா மிர்சா ஜோடியும் வெளியேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டங்களில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே, வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டனர்.

Update: 2017-01-22 20:02 GMT
மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டங்களில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே, வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டனர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), 50-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி வீரர் மிஸ்ச்சா ஸ்வேரேவை சந்தித்தார். விம்பிள்டன் மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான ஆன்டி முர்ரே இந்த ஆட்டத்தில் தனது இயல்பான ஆட்ட திறனை வெளிப்படுத்த முடியாமல் திணறினார். இதனை சரியாக பயன்படுத்தி கொண்டு சிறப்பாக செயல்பட்ட மிஸ்ச்சா ஸ்வேரே 7-5, 5-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஆன்டி முர்ரேவை வீழ்த்தி முதல் முறையாக கால் இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 3½ மணி நேரம் நீடித்தது.

11-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் களம் கண்ட ஆன்டி முர்ரே 5 முறை இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்து இருந்தார். நடப்பு சாம்பியன் ஜோகோவிச் 2-வது சுற்றில் தோல்வி கண்டு வெளியேறியதால் ஆன்டி முர்ரே முதல்முறையாக ஆஸ்திரேலிய ஓபனை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் ஏமாற்றத்தில் முடிந்து இருக்கிறது. உலக தர வரிசையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் வீரர்கள் இந்த போட்டி தொடரில் கால்இறுதிக்கு முன்பே நடையை கட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

வாவ்ரிங்கா வெற்றி

தோல்வி குறித்து ஆன்டி முர்ரே கருத்து தெரிவிக்கையில், ‘மிஸ்ச்சா இந்த வெற்றிக்கு தகுதி படைத்தவர். அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. இதுபோன்ற கடினமான தோல்வியை சந்தித்து அதில் இருந்து நான் மீண்டு வந்து இருக்கிறேன். இந்த தோல்வியில் இருந்தும் மீண்டு வருவேன்’ என்றார். மிஸ்ச்சா ஸ்வேரே அளித்த பேட்டியில், ‘உண்மையில் சொல்லப்போனால் இந்த வெற்றியை நம்ப முடியவில்லை. சில புள்ளிகளை நான் எப்படி வென்றேன்? என்பது எனக்கு தெரியவில்லை’ என்று தெரிவித்தார்.

முன்னாள் சாம்பியனும், உலக தர வரிசையில் 4-வது இடத்தில் இருப்பவருமான வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) 7-6 (7-2), 7-6 (7-4), 7-6 (7-4) என்ற நேர்செட்டில் 85-ம் நிலை வீரர் ஆந்த்ரே செபியை (இத்தாலி) சாய்த்து 4-வது முறையாக கால் இறுதிக்குள் நுழைந்தார். கால்இறுதியில் வாவ்ரிங்கா, சோங்காவை (பிரான்ஸ்) சந்திக்கிறார். 4-வது சுற்றில் சோங்கா 6-7 (4-7), 6-2, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் டேனியல் இவான்ஸ்சை (இங்கிலாந்து) தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

கால்இறுதியில் பெடரர்

17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக தர வரிசையில் 17-வது இடத்தில் இருப்பவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-7 (4-7), 6-4, 6-1, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் 5-ம் நிலை வீரர் நிஷிகோரியை (ஜப்பான்) வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். கால்இறுதியில் பெடரர், ஜெர்மனி வீரர் மிஸ்ச்சா ஸ்வேரேவை சந்திக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 7-5 என்ற நேர்செட்டில் மோனா பார்தெலை (ஜெர்மனி) தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார். கால் இறுதியில் வீனஸ் வில்லியம்ஸ், ரஷிய வீராங்கனை அனஸ்டாசியாவை (ரஷியா) எதிர்கொள்கிறார். முன்னதாக அனஸ்டாசியா 6-3, 6-3 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை ஸ்வெட்லானா குஸ்னெட்சோவாவை தோற்கடித்து கால் இறுதிக்குள் தடம் பதித்தார். மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 2-6, 3-6 என்ற நேர்செட்டில் 35-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ வன்டேவெஜ்ஜிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

சானியா ஜோடி தோல்வி

பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் ருமேனியா வீராங்கனை சோரானா கிறிஸ்டியை தோற்கடித்து முதல்முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சானியா மிர்சா (இந்தியா)-பார்போரா ஸ்டிரிகோவா (செக்குடியரசு) ஜோடி 3-6, 6-2, 2-6 என்ற செட் கணக்கில் ஜப்பானின் எரி ஹோஜூமி-மியூ கட்டோ இணையிடம் போராடி தோல்வி கண்டு வெளியேறியது.

லியாண்டர் பெயஸ் ஜோடி வெற்றி

கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து)-லியாண்டர் பெயஸ் (இந்தியா) இணை 6-4, 6-3 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் டெஸ்டானே அயவா-மார்க் போல்மான்ஸ் ஜோடியை சாய்த்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

மேலும் செய்திகள்