ஆசிய துப்பாக்கி சுடுதலில் வருண் தோமர், இஷா சிங்குக்கு தங்கம்
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.;
ஜகர்த்தா,
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. பாரீசில் வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி சுற்றான இதில் 26 நாடுகளை சேர்ந்த 385 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
நேற்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்திய வீரர் வருண் தோமர் 239.6 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீரர் அர்ஜூன் சிங் சீமா (237.3 புள்ளி) வெள்ளிப்பதக்கமும், மங்கோலியாவின் டேவாக்ஹூ எங்டிவான் (217.2 புள்ளி) வெண்கலப்பதக்கமும் வென்றனர். முன்னாள் ஜூனியர் உலக சாம்பியனான வருண் தோமர் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா உறுதி செய்த 14-வது கோட்டா இதுவாகும்.
முன்னதாக நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் வருண் தோமர் (586), அர்ஜூன் சிங் சீமா (579), உஜ்வால் மாலிக் (575) ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1,740 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. ஈரான் (1,732) வெள்ளிப்பதக்கமும், தென்கொரியா (1,732) வெண்கலப்பதக்கமும் பெற்றன.
இஷா சிங் தங்கம் வென்றார்
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவின் இறுதி சுற்றில் 19 வயது இந்திய வீராங்கனை இஷா சிங் 243.1 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை ருசித்தார். உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்றவரான ஐதராபாத்தை சேர்ந்த இஷா சிங் இந்த வெற்றியின் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தையும் உறுதிப்படுத்தினார். பாகிஸ்தான் வீராங்கனை கிஷ்மலா தலாத் (236.3 புள்ளி) வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியதுடன் அவரும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு இந்திய வீராங்கனை ரிதம் சங்வான் (214.5 புள்ளி) வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.
இதன் அணிகள் பிரிவில் ரிதம் சங்வான், சுர்பி ராவ், இஷா சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,736 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது. தென்கொரியா (1,723) வெள்ளிப்பதக்கமும், இந்தோனேசியா (1,709) வெண்கலப்பதக்கமும் பெற்றன.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற உத்தரபிரதேசத்தை சேர்ந்த 20 வயதான வருண் தோமர் கூறுகையில், 'எனது உறவினரான சவுரப் சவுத்ரியை (டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்) பார்த்து தான் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு துப்பாக்கி சுடுதலில் அடியெடுத்து வைத்தேன். அவர் எனக்கு உந்துசக்தியாக இருக்கிறார். அவர் தனது தொடக்க கால போட்டிகளிலேயே வெற்றி கண்டார். அவரை போலவே நானும் சர்வதேச போட்டிகளில் வெற்றியை குவிக்க விரும்புகிறேன். பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்காக தீவிரமாக தயாராகுவேன்' என்றார்.
இந்த போட்டியின் பதக்கப்பட்டியலில் இந்தியா 4 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என்று 6 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது.