தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் கிரண், லக்ஷயா கால்இறுதிக்கு தகுதி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டனில் கிரண்ஜார்ஜ், லக்‌ஷயா சென் கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.

Update: 2023-06-02 00:29 GMT

பாங்காங்,

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் நடந்து வருகிறது. இதில் எதிர்பார்க்கப்பட்ட இந்திய முன்னணி நட்சத்திரங்கள் ஏமாற்றிய நிலையில் வளரும் வீரர்கள் முன்னேறுகிறார்கள்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தகுதிநிலை வீரரும், தரவரிசையில் 59-வது இடத்தில் உள்ளவருமான இந்தியாவின் கிரண் ஜார்ஜ், 26-ம் நிலை வீரர் வெங் ஹாங் ஹாங்கை (சீனா) எதிர்கொண்டார். இதில் கலக்கலாக ஆடிய கிரண் ஜார்ஜ் 21-11, 21-19 என்ற நேர் செட்டில் 39 நிமிடங்களில் எதிராளியை அடக்கி முதல்முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய 'இளம் புயல்' லக்ஷயா சென், ஆல்இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியனான லி ஷி பெங்குடன் (சீனா) மல்லுக்கட்டினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லக்ஷயா சென் 21-17, 21-15 என்ற நேர் செட்டில் லி ஷி பெங்குக்கு அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள லக்ஷயா சென் அடுத்து மலேசியாவின் லியோங் ஜன் ஹாவுடன் மோதுகிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் சோகமே மிஞ்சியது. முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நேவால் தன்னை எதிர்த்த 5-ம் நிலை வீராங்கனை ஹி பிங் ஜியாவிடம் (சீனா) 11-21, 14-21 என்ற நேர் செட்டில் வீழ்ந்தார்.

இதே போல் 23 வயதான அஷ்மிதா சாலிகா 18-21, 13-21 செட் கணக்கில் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினிடம் (ஸ்பெயின்) பணிந்தார். ஏற்கனவே பி.வி.சிந்து முதல்சுற்றுடன் நடையை கட்டி விட்டதால் இத்துடன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

இதே போல் ஆண்கள் இரட்டையர் பிரிவில் போட்டித்தரநிலையில் முதலிடம் பெற்றிருந்த காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ெஷட்டி ஜோடி, இந்தோனேசியாவின் முகமது ஷோஹிபுல் பிக்ரி- பகாஸ் மலானா இணையை சந்தித்தது. 62 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் சாய்ராஜ்- சிராக் கூட்டணி 26-24, 11-21, 17-21 என்ற செட் கணக்கில் போராடி தோற்றது.

Tags:    

மேலும் செய்திகள்