ஆசிய உள்ளரங்க தடகள போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
ஆசிய உள்ளரங்க தடகள போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.;
சென்னை,
10-வது ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் நாட்டில் உள்ள அஸ்லானா நகரில் நடந்தது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர்கள் பிரவீன் சித்ரவேல் டிரிபிள்ஜம்ப்பில் வெள்ளிப்பதக்கமும், ஜெஸ்வின் ஆல்ட்ரின் நீளம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கமும், போல்வால்ட்டில் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) தமிழக வீராங்கனைகள் பவித்ரா வெள்ளிப்பதக்கமும், ரோசி மீனா வெண்கலப்பதக்கமும் வென்றனர். ஆசிய உள்ளரங்க தடகள போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர் வீராங்கனைகள் நேற்று பிற்பகலில் சென்னை திரும்பினர். அவர்களுடன் தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா, தி.மு.க எம்.பி. அப்துல்லா ஆகியோரும் வந்தனர். சென்னை விமான நிலையத்தில் வீரர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தடகள சங்கத்தின் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா கூறுகையில், 'ஆசிய உள்ளரங்க போட்டியில் இந்தியா சார்பில் 25 பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து 7 பேர் கலந்து கொண்டனர். இந்தியா 1 தங்கம், 6 வெள்ளி, 1 வெண்கலம் என 8 பதக்கங்களை வென்றது. இதில் 3 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்களை தமிழ்நாடு வீரர், வீராங்கனைகள் பெற்று உள்ளனர். இந்தியாவில் தடகள போட்டிக்கு உள்ளரங்க வசதி இல்லை. தடகள போட்டிக்கு உள்ளரங்க கட்டமைப்பை ஏற்படுத்தினால் சிறப்பாக இருக்கும்' என்றார்.
பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேல், ஜெஸ்வின் ஆல்ட்ரின், ரோசி மீனா, பவித்ரா ஆகியோர் கூறுகையில், 'உள்ளரங்கில் முதல்முறையாக விளையாடியதால் முழு திறனை வெளிகாட்ட முடியவில்லை. இருப்பினும் பதக்கங்களை வென்றது மகிழ்ச்சி. ஆசிய உள்ளரங்க தடகள போட்டி ஒரு தொடக்கம் தான். இதற்காக முழு அளவில் தயாராகவில்லை. வருகிற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக செயல்பட பயிற்சிகள் மேற்கொள்ள உள்ளோம். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே இலக்காகும்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் தடகள போட்டிகளுக்கான உள்ளரங்க வசதிகள் இல்லை. உள்ளரங்கில் விளையாடுவது என்பது முற்றிலும் வேறுமாதிரியான அனுபவமாக இருக்கிறது. இந்தியாவிலும், தமிழகத்திலும் சர்வதேச அளவிலான பயிற்சி மையங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். ஏற்கனவே தேசிய அளவில் தமிழகத்திற்கு பதக்கங்களை வென்று இருந்தாலும் தற்போது வரை அரசு வேலைக்காக காத்து இருக்கிறோம். விரைவில் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
பின்னர் தமிழக வீரர், வீராங்கனைகள் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.