சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்: 'நம்பர் ஒன்' வீராங்கனையுடன் சிந்து மோதல்..!!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் சிந்து, ‘நம்பர் ஒன்’ வீராங்கனை யமாகுச்சியுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.;

Update:2023-06-06 08:15 IST

கோப்புப்படம்

சிங்கப்பூர்,

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. வருகிற 11-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.7 கோடியாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்வோருக்கு ரூ.49 லட்சம் பரிசாக கிடைக்கும்.

இந்த போட்டியில் களம் காணும் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு, முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது. தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள சிந்து, 'நம்பர் ஒன்' வீராங்கனையும், உலக சாம்பியனுமான அகானே யமாகுச்சியை (ஜப்பான்) சந்திக்கும் வகையில் போட்டி அட்டவணை அமைந்திருக்கிறது. அவருக்கு எதிராக சிந்து 23 முறை மோதி அதில் 14-ல் வெற்றி பெற்று இருக்கிறார். என்றாலும் சிந்துவின் ஆட்டத்திறன் இப்போது மெச்சும்படி இல்லை. இந்த சீசனில் இதுவரை எந்த பட்டமும் வெல்லவில்லை. கடந்த வாரம் தாய்லாந்து ஓபனில் முதல் சுற்றுடன் நடையை கட்டினார். நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் அடியெடுத்து வைக்கும் சிந்து முந்தைய தோல்விகளுக்கு பரிகாரம் தேடும் வகையில் ஆடுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சாய்னா நேவால்

மற்றொரு இந்திய வீராங்கனையும், முன்னாள் சாம்பியனுமான சாய்னா நேவாலுக்கும் முதல் சுற்றே பெரும் சோதனையாக இருக்கப்போகிறது. அவர் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ராட்சனோக் இன்டோனனை (தாய்லாந்து) எதிர்கொள்கிறார். அன்சே யங் (தென்கொரியா), தாய் ஜூ யிங் (சீனதைபே), ஒலிம்பிக் சாம்பியன் சென் யுபே (சீனா), 3 முறை உலக சாம்பியன் கரோலினா மரின் (ஸ்பெயின்) ஆகிய நட்சத்திர வீராங்கனைகளும் மல்லுக்கட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

ஆண்கள் ஒற்றையரில் இந்திய தரப்பில் ஸ்ரீகாந்த், லக்ஷயா சென், எச்.எஸ்.பிரனாய், பிரியன்ஷூ ரஜவாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இதில் 'இளம்புயல்' லக்ஷயா சென்னுக்கு முதல் சுற்றே சிக்கலாக உள்ளது. அவர் சீனதைபேயின் சோவ் டைன் சென்னை எதிர்கொள்கிறார். அண்மையில் மலேசியா மாஸ்டர்ஸ் போட்டியில் கோப்பையை கைப்பற்றிய பிரனாய் முதல் ரவுண்டில் கோடாய் நரகாவுடன் (ஜப்பான்) மோதுகிறார்.

இரட்டையரில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி, திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடிகளின் ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்