பயிற்சியின் போது காயம்: ஆசிய விளையாட்டில் இருந்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விலகல்

பயிற்சியின் போது கால்முட்டியில் காயமடைந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து ஒதுங்கியுள்ளார்.;

Update:2023-08-16 04:14 IST

கோப்புப்படம் 

புதுடெல்லி,

வினேஷ் போகத்

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய மல்யுத்த அணிக்கு நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் (53 கிலோ உடல் எடைப்பிரிவு), பஜ்ரங் பூனியா (65 கிலோ) ஆகியோர் தகுதி போட்டி இன்றி நேரடியாக தேர்வு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த சலுகையை எதிர்த்து ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்றவரான அந்திம் பன்ஹால், இளையோர் ஆசிய சாம்பியன் சுஜீத் கல்கால் டெல்லி ஐகோர்ட்டில் முறையிட்டனர். ஆனால் அவர்களது மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் சலசலப்புக்கு மத்தியில் அணியில் இடம் பிடித்த காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான வினேஷ் போகத் எதிர்பாராதவிதமாக காயத்தில் சிக்கி ஆசிய விளையாட்டில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து அவர் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், ' உங்களிடம் மிகவும் வருத்தமான தகவலை பகிர்ந்து கொள்கிறேன். இரு தினங்களுக்கு முன்பு பயிற்சியின் போது எனது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு ஸ்கேன் எடுத்து பரிசோதித்து பார்த்த போது, காயத்தில் இருந்து மீள்வதற்கு ஆபரேஷன் செய்வதை தவிர வேறு வழியில்லை என்று டாக்டர் தெரிவித்தார். 17-ந்தேதி (நாளை) மும்பையில் எனக்கு ஆபரேஷன் நடைபெற உள்ளது.

ரசிகர்கள் ஆதரவு தேவை

2018-ம் ஆண்டு ஜகர்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்ற எனக்கு அதை தக்க வைக்க வேண்டும் என்பதே கனவாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக காயத்தால் இப்போது ஆசிய விளையாட்டில் இருந்து விலகுகிறேன். காயத்தில் இருந்து வலுவாக மீண்டு வந்து விரைவில் 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவேன். ரசிகர்கள் அனைவரையும் எனக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். உங்களது ஆதரவு தான் எனது பலம்' என்று கூறியுள்ளார்.

பாட்டியாலாவில் வருகிற 25-26-ந்தேதிகளில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டி நடத்தப்படுகிறது. இந்த முறை யாருக்கும் விதிவிலக்கு கிடையாது என்ற மல்யுத்த சம்மேளனத்தை நிர்வகிக்கும் இடைக்கால கமிட்டி கூறிவிட்டது. இது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றாகவும் அமைந்துள்ளது. இந்த போட்டியையும் வினேஷ் போகத் தவற விடுகிறார்.

மாற்று வீராங்கனை

அரியானாவைச் சேர்ந்த 28 வயதான வினேஷ் போகத் காயத்தால் பின்வாங்கிய நிலையில் அந்திம் பன்ஹாலுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. தகுதி போட்டியில் வெற்றி பெற்று மாற்று வீராங்கனை பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 19 வயதான அந்திம் பன்ஹால், வினேஷ் போகத்துக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்